×

டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்து தரக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து விற்பனை செய்யக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் தொடர்ச்சியாக மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளால் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த சோதனைகளின்போது சென்னை, பெருங்குடி திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வலி நிவாரணி மருந்துகளை பெருமளவில் வாங்கி, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

எனவே, அந்த மருந்து கடைக்கு கொட்டிவாக்கம் சரக மருந்துகள் ஆய்வாளரால் பெருங்குடி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் அக்கடையின் மீது சட்ட நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அந்த மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மன நோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu , Do not give medicine without doctor's prescription: Tamil Nadu government order
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்