×

2023-2024ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வருகிற மார்ச் 20ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு, நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை, மார்ச் மாதம் 20ம் தேதி காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார். தொடர்ந்து 2022-2023ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், மற்றும் 2022-2023ம் ஆண்டுக்கான இறுதி கூடுதல் மானிய கோரிக்கையும் நிதி அமைச்சர் மார்ச் மாதம் 28ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார். 2023ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பின்பு, அலுவல் ஆய்வு குழு கூடி எத்தனை நாட்கள் சட்டமன்றம் நடைபெறுவது என்பதை தீர்மானிக்கும்.

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை முடிவு செய்யப்பட்டு விட்டதா என்று கேட்கிறீர்கள். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தீர்ப்பு கூறுகிறேன் என்று ஒருபோதும் நான் சொல்லவில்லை. சட்டமன்றத்தில் அந்த பிரச்னை பேசி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே எடுத்த முடிவை திரும்ப திரும்ப பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் எந்தெந்த இருக்கையில் அமர வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அமருவார்கள். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் முடிவுக்கு பிறகுதான் சட்டமன்றத்தில் நான் முடிவு எடுப்பேன் என்று நான் சொல்லவில்லை.

சட்டமன்றம் என்னுடைய ஆளுகைக்கு உட்பட்டது. நான் யார் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது என்னுடைய உரிமை. அந்த அடிப்படையில் அனைவருக்கும் சட்டமன்றத்தில் தகுதியான இடங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, சட்டமன்றத்தில் பேசி எடுக்கப்பட்ட முடிவுக்கு பிறகு, ஓபிஎஸ், இபிஎஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது முடிந்த விவகாரம். முடிந்த விவகாரத்தை அவர்களும் திரும்ப திரும்ப கேட்க மாட்டார்கள். நாட்டுக்கு அது ஒன்றும் முக்கிய பிரச்னை இல்லை. சட்டமன்றத்தில் பேசும்போது, மக்கள் பிரச்னையை பேசப்போகிறார்கள். பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் எந்த பிரச்னையும் இல்லை. யார் யாருக்கு எந்த இடம் கொடுக்க வேண்டியது சட்டப்பேரவை தலைவரின் உரிமை. அவர்களுக்கு சின்ன சின்ன பிரச்னை இருப்பதாக பேரவையில் கேட்டார்கள். அது பேசி முடிவு எடுக்கப்பட்டு விட்டது. மானிய கூட்டம் தொடர்ந்து நடைபெறுமா என்பது பற்றி அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கப்படும். அலுவல் ஆய்வு குழு கூடி சட்டமன்ற கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்றும், வேளாண் நிதி நிலை அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது நிதிநிலை அறிக்கை 20ம் தேதி தாக்கல் செய்தபிறகு அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கப்படும். மார்ச் 28ம் தேதி முன்பண மானிய கோரிக்கையும், கடந்த ஆண்டு செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்வார்கள். மற்றபடி எல்லா விவகாரங்களும் அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும். சட்டப்பேரவை மாடத்தில் உள்ள பார்வையாளர் இருக்கையில் இருந்தபடி அவை நடவடிக்கைகளை வீடியோ எடுத்த விவகாரம் உரிமை குழுவுக்கு அனுப்பி இருக்கிறது. அவர்கள் முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Speaker ,Appavu , Tamil Nadu budget for 2023-2024 to be tabled on March 20: Speaker Appavu's announcement
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...