கோயம்பேடு சுற்று வட்டார பகுதிகளில் தள்ளுவண்டி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு: கடைகளுக்கு ரூ.30,000 அபராதம்

வளசரவாக்கம்: கோயம்பேடு சுற்று வட்டார பகுதிகளில், தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படும்  தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக நேற்று தினகரன் நாளிதழில்  படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அக்கடைகளுக்கு ரூ.30,000 அபராதம் விதித்தனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் சுற்றி உள்ள ஏராளமான தள்ளுவண்டி கடைகளில் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி, பிரைட் ரைஸ், வறுத்த கறி, மீன் மற்றும் பஜ்ஜி வடை போண்டா சமோசா உள்ளிட்ட அனைத்துமே திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் சமைத்து அங்கேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யும் உணவுகளை மார்க்கெட்டில் வேலை செய்யும் கூலிதொழிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு,  செரிமான குறைப்பாடு, நெஞ்சு எரிச்சல் என பலவிதமான பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.

எனவே, மார்க்கெட்டில் சுற்றி உள்ள பகுதிகளில் தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், மார்க்கெட்டை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக நேற்று  தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதை தொடர்ந்து நேற்று மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் மேற்பார்வையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் திடீர் என்று சுமார் 50க்கும் மேற்பட்ட  தள்ளுவண்டி கடைகளை ஆய்வு செய்தனர். இதில் தரமற்ற எண்ணெய்களை கண்டுபிடித்து கீழே கொட்டினர்.

பிளாஸ்டிக் கவர்களில் இட்லி, பூரி, தோசைகளை பொட்டலமாக மடித்து விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதித்தனர். அதேபோல் தள்ளுவண்டி கடைகளில் உணவுகளை சோதனை செய்தனர். இதில் தரமற்ற உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்ததாக ஒரு கடைக்கு ரூ.2,000 என 30,000 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘‘மார்க்கெட் பகுதிகளில் கற்றி உள்ள தள்ளுவண்டி கடைகளில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்வதாகவும், அதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என  தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பழைய எண்ணெய்களில் சமைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்து அபராதம் விதித்தனர். மேலும், சாலைகளை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள தள்ளு வண்டிகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனே அகற்ற வேண்டும்.’’ என கோரினர்.

Related Stories: