×

புழல் 23வது வார்டில் முறிந்து விழும் அபாயத்தில் டிரான்ஸ்பார்மர்: மாற்றியமைக்க வலியுறுத்தல்

புழல்: புழல் 23வது வார்டு பகுதியில் ஒரு மின் டிரான்ஸ்பார்மரின் கான்கிரீட் தூண்களின் மேற்பூச்சுகள் உதிர்ந்து, மின்சாரத்தை கடத்தும் சாதனங்கள் துருப்பிடித்து, எந்நேரத்திலும் கீழே முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு தீ விபத்துகள் நடைபெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த மின் டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 23வது வார்டான காந்தி பிரதான சாலையில் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் இயங்கி வருகிறது.

இந்த மின் டிரான்ஸ்பார்மர் கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி, தற்போது அதில் உள்ள மின் சாதனங்கள் துருப்பிடித்து, இயந்திரங்களில் விடப்பட்ட ஆயில் வெளிப்புறமாக கசிந்து வருகிறது. மேலும், அந்த மின் டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் 4 கான்கிரீட் தூண்களில் சிமென்ட் மேற்பூச்சுகள் உதிர்ந்து வருகின்றன. இதனால் அந்த கான்கிரீட் தூண்கள் வலுவிழந்து, துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் வெளியே தெரிய, எந்நேரத்திலும் கீழே முறிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. மேலும், அந்த மின் டிரான்ஸ்பார்மர் வலுவிழந்து இருப்பதால், அப்பகுதியில் லேசான காற்று வீசினாலும் அசைந்தாடி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதுதவிர, அந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பிகள் சேதமாகி அறுந்து தீ விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அப்பகுதியில் சேதமான மின் டிரான்ஸ்பார்மர் வெடித்து, எந்நேரத்திலும் உயிர்ப்பலிகள் ஏற்படும் என மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. மேலும், இந்த மின் டிரான்ஸ்பார்மர் அருகே மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம், அங்கன்வாடி மையம், நூலகம், 23வது வார்டு அலுவலகம் இருப்பதால், இங்கு அதிகளவிலான மக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே, உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன், அந்த மின் டிரான்ஸ்பார்மரை மாற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : 23rd Ward , Transformer at risk of tripping in Puzhal 23rd Ward: Urge to replace
× RELATED செங்குன்றம் அருகே உடைந்த...