×

மார்ச் 9ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்..!!

சென்னை: மார்ச் 9ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சரவை கூடுகிறது. 2023 - 24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையானது மார்ச் மாதம் 17 அல்லது 20ம் தேதி நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக அதிகாரபூர்வமாக இன்று மாலை 6 மணிக்கு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்க உள்ளார்.

அந்த தேதி அறிவிக்கப்பட்டதற்கு பின்பாக அலுவல்கள் நடத்துவது தொடர்பான கூட்டமானது எப்போது நடைபெறும் என்பது அலுவலாய்வு கூட்டத்திற்கு பின்பாக முடிவு செய்யப்படும். நிதிநிலை அறிக்கைக்கு முன்பாகவே வழக்கமாக அமைச்சரவை கூட்டமானது நடைபெறும். அதன் அடிப்படையில் மார்ச் 9ம் தேதி அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் பல திட்டங்களுக்கான ஒப்புதல் போன்ற அனைத்து விஷயங்களும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று முதலமைச்சர் கூறியிருந்தார். மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றத்துக்கு பின்பாகவே நிதிநிலை அறிக்கை தொடர்பாகவும், வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil ,Nadu ,Cabinet ,Chief Minister ,M. K. Stalin , March 9, Chief Minister M. K. Stalin, Tamil Nadu cabinet meeting
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...