செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்: சோழவரம் அருகே பரபரப்பு

புழல்: சோழவரம் அருகே ஒரு செல்போன் டவரில் குடிபோதையுடன் ஏறிய வாலிபர், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டினார். அவரிடம் போலீசார், தீயணைப்பு படையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர். சோழவரம் அருகே ஆத்தூர், வி.ஜி.மேடு பகுதியை சேர்ந்தவர் அஜித் (25). கூலித்தொழிலாளி. நேற்று மாலை குடிபோதையில் அஜித் அங்குள்ள ஒரு செல்போன் டவர்மீது ஏறி நின்று கொண்டு, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து சத்தம் போட்டுள்ளார். அவரை கீழே இறக்க அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரம் போராடியும் அஜித் கீழே இறங்கிவர மறுத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சோழவரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அஜித்திடம் சுமார் ஒரு மணி நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஒருவழியாக தீயணைப்பு படையினர் மேலேறி சென்று, அஜித்தை சமாதானப்படுத்தி கீழே இறக்கி வந்தனர். விசாரணையில், அவருக்கு கடந்த சில மாதங்களாக வேலை இல்லாததால் மனைவி மற்றும் உறவினர்களிடையே குடும்பத் தகராறு நிலவி வருவதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அஜித்திடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: