×

சிவகாசியில் 100 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது களைகட்டும் மாசி தெருக்கட்டு பொங்கல் விழா

*அம்மன் உருவம் வைத்து, முளைப்பாரி ஏந்தி, கும்மியடித்து  வழிபாடு

சிவகாசி : சிவகாசியில் புகழ்பெற்ற மாசி தெருக்கட்டு பொங்கல் விழா களைகட்டத் துவங்கியுள்ளது.சிவகாசியில் மாசி மாதத்தில் சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களில் மாசி தெருக்கட்டு பொங்கல் விழா மிகவும் சிறப்பானதாக இருந்து வருகிறது. இந்த தெருக்கட்டு பொங்கல் விழா என்பது, சிவகாசியில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் தனிதனியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மாசி மாதம் பிறந்தவுடன், ஒவ்வொரு தெருவிலும் மையப் பகுதியில் உள்ள, தெருக்கள் இணையும் சந்திப்பு பகுதியில் உள்ள முத்தாலம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு தெருவிலும் சிறிய அளவிலான கல்தூண் ஒன்று வைக்கப்பட்டு, விளக்கேற்றும் பீடம் அமைக்கப்பட்டு அதனை முத்தாலம்மனாக வழிபட்டு வரும் நிகழ்ச்சி சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு மாசி மாதம் பிறந்தது முதலே தெருக்கட்டு பொங்கல் களைகட்டி தொடங்கியுள்ளது. தினமும் ஒவ்வொரு தெருவின் மத்தியிலும் மண் மற்றும் மஞ்சள், சந்தனத்தால் ஆன முத்தாலம்மன் உருவம் வடிவமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. முத்தாலம்மன் பீடமும், அங்கு அணையா விளக்கும் ஏற்றப்பட்டு வருகிறது. தெருக்கட்டு பொங்கல் அறிவிக்கப்பட்டு, தெருக்களில் வேப்பிலை, காப்பு கட்டப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. காப்பு கட்டியவுடன் தெருவில் வசிப்பவர்கள் யாரும் வெளியூர்களுக்கு சென்று தங்கக் கூடாது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இன்று வரை இந்த நம்பிக்கையை பெரும்பாலானவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

வெளியூர்களில் வேலை விசயமாக தங்கியிருப்பவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. தெருக்கட்டு பொங்கல் துவங்கியவுடன், தெருப் பகுதியில் உள்ள பெண்கள் விரதம் இருந்து, நேர்த்திக்கடன் போட்டு முளைப்பாரி வளர்ப்பார்கள். தினமும் இரவு முத்தாலம்மன் சுவாமி முன்பு சிறுமிகள் மற்றும் பெண்கள் இணைந்து கும்மிப்பாட்டு பாடுவார்கள். அதனை தொடர்ந்து முத்தாலம்மனுக்கு பூஜைகள் நடைபெறும்.

7 நாட்களும் முத்தாலம்மன் கோவில் முன்பு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறு குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.தெருக்கட்டுப் பொங்கலின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் வீதியுலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். சீர்வரிசைப் பொருட்கள், தேங்காய், பழங்கள் அடங்கிய தட்டுகளுடன் தெருக்களில் ஊர்வலமாக சென்று சிவகாசியின் காவல் தெய்வமாக இருக்கும் கருப்பசாமி கோவில், பத்திரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில்களுக்கு தாரை தப்பட்டை, மேளதாள முழக்கங்களுடன் சென்று சுவாமிகளை வணங்குவார்கள்.

பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்து தங்களது தெருப் பகுதிக்கு வருவார்கள். மறுநாள் நேர்த்திக்கடன் செலுத்திய முளைப்பாரி கரைக்கப்படும். தொடர்ந்து தெருவில் உள்ள அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். மாசி தெருக்கட்டு பொங்கலுக்காக, ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் தெருக்கட்டு நிர்வாகிகள் இதற்கான பணிகளை செய்வார்கள்.

பொங்கல் அறிவித்தவுடன் தெருவில் வசிக்கும் அனைவரும் தெருக்கட்டு பொங்கல் தலைக்கட்டு வரி கொடுக்க வேண்டும். வசூலாகும் பணத்தில் பொங்கல் நிகழ்ச்சிகளும் மற்றும் தெருப் பகுதியில் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளையும் செய்வார்கள். இந்த வழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முந்தைய காலங்களில் ஒரு தெருவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வசித்து வந்தார்கள். நாளடைவில் இந்த வழக்கம் மறைந்து, இன்று அனைத்து சமூக மக்களும் அனைத்து பகுதிகளிலும் சேர்ந்து வசித்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதாகவும், பலப்படுத்துவதாகவும் மாசி தெருக்கட்டு பொங்கல் விழா இருந்து வருகிறது. சிவகாசி அருகே தேவர்குளம் இபி காலனியில் கடந்த 19ம் தேதி தெருக்கட்டு பொங்கல் தொடங்கியது. அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.

தினமும் கும்மிபாட்டு பாடி வழிபாடு நடத்தினர். நேற்று முன்தினம் அம்மன் உருவம் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து முளைபாரி ஊர்வலம், அன்னதானம் நடைபெற்றது. இரவு வில்லுபாட்டு நடைபெற்றது. தெருக்கட்டு பொங்கல் ஏற்பாடுகளை இபிகாலனி தெருக்கட்டு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பக்தர் முருகன் கூறுகையில், ‘‘முந்தைய காலங்களில் வீடுகளில் இருந்து விவசாய வேலைகளுக்கு மற்றும் கூலி வேலைக்குச் செல்பவர்கள், தெருவின் சந்திப்பு பகுதியில் சூடம் ஏற்றி வணங்கிவிட்டு தங்களது பணிகளுக்கு செல்வார்கள். ஆண்டு முழுவதும் உருவம் இல்லாமல் வெறும் கல்தூணாக இருக்கும் முத்தாலம்மன் சுவாமிக்கு, மாசி மாதத்தில் உருவம் கொடுக்கப்படும். மஞ்சள், சந்தனம் கொண்டு தேங்காயில் முத்தாலம்மன் உருவம் அமைக்கப்படும். இந்த முத்தாலம்மன் சுவாமிக்கு 7 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். காலம்தொட்டு இன்றளவும் இந்த தெருக்கட்டு பொங்கல் சிவகாசி பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது’’ என்றார்.

Tags : Weeding Masi Terukattu Pongal Festival ,Sivakasi , Sivakasi: The famous Masi street cut Pongal festival has started in Sivakasi.
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை