துபாயில் இருந்து திருவனந்தபுரம் வந்த குமரி வாலிபரை கடத்தி ரிசார்ட்டில் அடைத்து பணம், நகை பறிப்பு

*காதலி உள்பட 6 பேர் கைது

திருவனந்தபுரம் : துபாயில்  இருந்து திருவனந்தபுரம் வந்த குமரி வாலிபரை அவரது காதலி தலைமையிலான  கும்பல் காரில் கடத்தி 2 நாளாக ரிசார்ட்டில் அடைத்து வைத்து சித்ரவதை  செய்து ₹16 லட்சம் பணம், 5 பவுன் நகை, 2  செல்போன்களை பறித்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 6 பேர் கும்பலை கைது செய்து  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே உள்ள இளங்கடையை  சேர்ந்தவர் முகைதீன் அப்துல் காதர்(44). துபாயில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்தில் மானேஜராக பணி புரிந்து வருகிறார்.  துபாயில்  வைத்து அவருக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த இன்ஷா என்ற இளம்பெண்ணுக்கும்  இடையே தொடர்பு ஏற்பட்டு உள்ளது. 2 பேரும் கடந்த 6 மாதமாக  ‘லிவ் இன் ‘ உறவில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையே  சமீபத்தில் இன்ஷா ஊருக்குத் திரும்பினார்.

தொடர்ந்து கடந்த சில  தினங்களுக்கு முன்பு முகைதீன் அப்துல் காதரை தொடர்பு கொண்டார் இன்ஷா. தனது  வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். ஆகவே வீட்டுக்கு வந்து  பெற்றோரை சந்தித்து பேச வேண்டும் என்று கூறி அழைத்து உள்ளார். அதற்கு  முகைதீன் அப்துல் காதரும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி கடந்த சில  தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து காதலியை பார்ப்பதற்காக முகைதீன் அப்துல் காதர் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டார்.

 விமான நிலையத்தை விட்டு அவர்  வெளியே வந்தவுடன் தயாராக காத்திருந்த இன்ஷா, அவரது அண்ணன் ஷெபீக் உள்பட 8  பேர் கும்பல் அவரை திபு திபுவென காரில் கடத்திச் சென்றது. இதனால் முகைதீன்  அப்துல் காதர் அதிர்ச்சி அடைந்தார். ஏன் இப்படி அவசரப்படுகிறீர்கள் என்று  கேட்டார். அப்போது  ₹1 கோடி  பணம் தரவேண்டும் என்று கூறி முகைதீன் அப்துல் காதரை இன்ஷா  தலைமையிலான  கும்பல் மிரட்டியது. காதலியே தன்னை பணம் கேட்டு மிரட்டியதால் முகைதீன்  அப்துல் காதர் அதிர்ச்சி அடைந்தார். உடனே பணம் தர முடியாது என்று அவர்  கூறியுள்ளார்.

 இதையடுத்து அந்தக் கும்பல் திருவனந்தபுரம் அருகே  சிறையின்கீழ் என்ற இடத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு கொண்டு சென்று அவரை  கட்டிப் போட்டு சித்திரவதை செய்தது. பின் அவரிடம் இருந்த 5 பவுன் நகை, விலை  உயர்ந்த 2 செல்போன்களை கும்பல் பறித்தது.இது தவிர ₹16 லட்சம்  பணத்தையும் கும்பல் அவரிடம் இருந்து பறித்து உள்ளது. 2 நாட்களுக்குப் பிறகு அந்தக் கும்பல் முகைதீன் அப்துல் காதரை திருவனந்தபுரம்  விமான நிலையம் அருகே விட்டு விட்டு தப்பிச் சென்றது. தொடர்ந்து அவர் வேறொரு  செல்போனில் இருந்து உறவினரை அழைத்து விவரத்தை கூறியுள்ளார்.

 இது  தொடர்பாக வலியதுறை போலீசில் முகைதீன் அப்துல் காதர் புகார் செய்தார். அதன்  பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஷா உள்பட அந்த கும்பலைச் சேர்ந்த 6  பேரை கைது செய்தனர். பெற்றோரை சந்திக்க வரவழைத்து விட்டு காதலனை கடத்தி  ரிசாட்டில் அடைத்து வைத்து பணம் பறித்தது ஏன்? என்பது புரியாத புதிதாக  உள்ளது. இது குறித்து போலீசார் கைதான 6 பேர் கும்பலிடமும் தீவிரமாக விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: