×

வால்பாறை அருகே புல்மலை பகுதியில் காட்டுத்தீயால் பல நூறு ஹெக்டர் பரப்பளவில் புற்கள் எரிந்து நாசம்

*கட்டுக்குள் கொண்டு வர வன அதிகாரிகள் தீவிர முயற்சி

வால்பாறை : தமிழக, கேரள எல்லையில் வால்பாறை அருகே புல்மலை பகுதியில் பரவிய காட்டுத்தீயில் பல நூறு ஹெக்டர் பரப்பில் புல்வெளி எரிந்து சேதமானது. இதையடுத்து தீ பரவலை தடுக்கவும், கட்டுக்குள் கொண்டு வரவும் வால்பாறை, மானாம்பள்ளி சரக அதிகாரிகள், ஊழியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்து 11 கிமீ தூரம் உள்ளது அக்காமலை. இங்கிருந்து 8 கிமீ தொலைவில் புல்மலை அமைந்துள்ளது. இந்த புல் மலைப்பகுதி 1,500 ஹெக்டர் பரப்பு உடையது. பல வகையான புற்கள் வளர்ந்து காணப்படுகின்றன. மழைக்காலத்தில் தண்ணீரை உறிஞ்சி வைத்து கொண்டு, கோடை காலத்தில் தண்ணீரை வெளியிடும். இதனால் வால்பாறை பகுதியில் தண்ணீர் பஞ்சம் எப்போதும் ஏற்படாது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உயரமான இடங்களில் அமைந்துள்ள புல்மலை பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு பேணி பாதுகாக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் புல் மலையை போல, எல்லையையொட்டி 8 கிமீ தூரத்தில் கேரள எல்லைக்குள் இரவிக்குளம் பகுதியிலும் புல்மலை அமைந்துள்ளது. இங்கும் ஏராளமான புல் வகைகள் வளர்ந்துள்ளன. இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காவாக அறிவித்து கேரள வனத்துறை பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் இரவிக்குளம் புல்மலை பகுதியில் மர்ம நபர்களால் தீ பற்ற வைக்கப்பட்டது. இதனால் காட்டு தீ உருவாகி நேற்று முன்தினம் இரவு முதல் வால்பாறை புல்மலை பகுதியில் வேகமாக பரவியது.

வால்பாறை பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் காட்டுத்தீ மளமளவென பிடித்து எரிய துவங்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் மற்றும் சிறப்பு குழுவினர் நேற்று அதிகாலை புல் மலை பகுதியில் முகாமிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயின் வேகம் அதிகரித்ததால் கூடுதல் பணியாளர்கள் தேவைப்பட்டனர். இதையடுத்து மானாம்பள்ளி வனச்சரக  ஊழியர்கள் ஜீப்பில் புல்மலைக்கு நேற்று சென்றனர்.

புல்மலை பகுதியில் பரவிய தீ காரணமாக பல நூறு ஹெக்டர் பரப்பில் புற்கள் தீயில் எரிந்து சேதமாயிருக்கலாம் என தெரிகிறது. புல்மலைப்பகுதியில் காட்டுத்தீ பிடித்து அப்பகுதி  முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயை அணைக்க சென்ற வனத்துறை ஜீப் விபத்தில் சிக்கியது

தீயை அணைக்க மானாம்பள்ளி வனச்சரக  ஊழியர்கள் ஜீப்பில் புல்மலையை நோக்கி நேற்று சென்றனர். அப்போது கருமலை  பாலாஜி கோயிலில் இருந்து வால்பாறையை நோக்கி காரில் சுற்றுலா பயணிகள் எதிரே வந்தனர். நடுமலை பகுதியில் வந்தபோது வனத்துறை  ஜீப்பும், காரும் நேருக்குநேர் மோதின. இதில் வனத்துறை  ஓட்டுனரும் வேட்டைத்தடுப்பு காவலருமான ஜான்பால் (26) மற்றும் ஊழியர்கள்  அரவிந்த் (24), வினோத்குமார் (26), அய்யப்பன் (25), மனோஜ்குமார் (26),  விக்னேஷ்வரன் (23), கிறிஸ்டோபர் (24) ஆகிய 7 பேருக்கு கை, கால்களில் காயம்  ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 7 பேரும் வால்பாறை அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Walbara , Valparai: In the forest fire that spread near Valparai near Valparai on the border of Kerala and Tamil Nadu, hundreds of hectares of grassland were burnt and damaged.
× RELATED மழையால் வெள்ளப்பெருக்கு கூழாங்கல் ஆற்றில் இறங்க தடை