×

கோயம்பேடு பஸ் நிலையம், மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவு: வயிற்றுப்போக்கு பாதிப்பால் அவதிப்படும் பொதுமக்கள்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றி, ஏராளமான தள்ளுவண்டி உணவு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுகளை சாப்பிடும்,  பொதுமக்கள் வயிற்றுப்போக்கு உட்பட பலவிதமான பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

 சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் சுற்றி 300க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி உணவு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சிக்கன், மட்டன் பிரியாணி, பிரைட் ரைஸ் மற்றும் வறுத்த மீன்,  வடை, போண்டா, சமோசா, பஜ்ஜி உள்ளிட்ட அனைத்துமே திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் சமைத்து, அங்கேயே விற்பனை செய்யப்படுகின்றன. வெளியூர்களுக்கு செல்வதற்காக இங்கு வரும் பயணிகள், காய்கறி, பூ, பழம் ஆகிய மார்க்கெட்டுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என ஏராளமானவர்கள் இந்த கடைகளில், அவசர தேவைக்காகவும், விலை மலிவாக உள்ளது என்பதற்காகவும் வாங்கி சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக, வயிற்றுப்போக்கு, செரிமான குறைப்பாடு மற்றும் நெஞ்சு எரிச்சல் என பலவிதமான பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட் சுற்றி தள்ளுவண்டி ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது. 150 கடைகள் இருந்த நிலையில் தற்போது 300க்கும் மேற்பட்ட கடைகள் முளைத்துவிட்டது. சாலையோர தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படும் உணவுகள் அனைத்தும் சுத்தம் இல்லாமலும், திறந்தவெளியில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, அவற்றை சாப்பிடுபவர்களுக்கு செரிமான குறைபாடு உட்பட பலவிதமான நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம்.  சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவித்துவுள்ளோம். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை  எடுக்கவில்லை. எனவே, நோய்களின் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடநடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளியில் உணவுகனை விற்பனை செய்யப்படுவதை உடனடியாக தவிர்க்க வேண்டும்.’’ என்றார்.

சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றிள்ள ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி உணவு கடைகளால் தினமும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்படும் சிக்கன், மட்டன் பிரியாணி, வறுத்த மீன், கறி, இட்லி, தோசை பூரி ஆகிய உணவுகள் சுத்தமாக உள்ளதா என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். தற்போது  ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன.எனவே, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதுதொடர்பாக, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.’’ என தெரிவித்தனர்.

Tags : Coimbed Bus Station , Koyambedu bus station, trolley shop, poor quality food, diarrheal disease,
× RELATED கோயம்பேடு பேருந்து நிலையத்தில்...