×

மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பொருத்தப்பட்ட 43 ஆயிரம் வாகனங்களின் பதிவெண் சரி செய்யப்பட்டது: 3 வாரத்தில் மாநகர போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

சென்னை: நம்பர் பிளேட்டில் தலைவர்களின் படங்கள், பெயர்களுடன் இருந்த 43 ஆயிரம் வாகன பதிவெண்களை போலீசார் சரி செய்தனர். சென்னை மாநகர காவல் எல்லையில் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களின் பதிவெண்களில் தலைவர்கள் படங்கள், கவிதைகள், பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளதை அகற்றி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 அந்த வகையில், போக்குவரத்து விதிகளை மீறி வாகன பதிவெண்களில் தலைவர்கள் படங்கள், கவிதைகள், பெயர்கள் உள்ள வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, குறிப்பாக சென்னை மாநகரம் முழுவதும் நேற்று பூங்காக்கள், வணிக வளாகங்கள், மார்க்ெகட்டுகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையில் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களில் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டிருந்த 4,132 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. அதோடு இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பதிவெண்கள் உடனே சரிசெய்யப்பட்டது. அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளுக்கு 3 நாட்களுக்குள் அபராதம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் அவருக்கு ரூ.1500 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில், கடந்த 3 வாரங்களில் மாநகரம் முழுவதும் 43 ஆயிரம் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு முறையற்ற நிலையில் இருந்த பதிவெண்கள் சரிசெய்யப்பட்டுள்ளது.

Tags : Motor Vehicle Act, City Traffic Police, Action
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்