×

மாசி திருவிழா, ஞாயிறு விடுமுறையையொட்டி திருச்செந்தூர், பழநியில் அலைமோதிய கூட்டம்

திருச்செந்தூர்/பழநி: மாசி திருவிழா, ஞாயிறு விடுமுறையையொட்டி திருச்செந்தூர், பழநியில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் மார்ச் 8ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. மாசி திருவிழா மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி நேற்று திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கோயில் வளாகம், கடற்கரை, ரதவீதிகள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் மக்களாகவே தென்பட்டனர். மேலும் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் மாசி மாத கிருத்திகை, வார விடுமுறை தினத்தின் காரணமாக நேற்று பக்தர்கள் வருகை அதிகளவு இருந்தது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனத்திற்கு 2 மணிநேரத்திற்கு மேல் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

மலைக்கோயில் அன்னதானத்திற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர். பக்தர்கள் வந்த வாகனங்கள் அடிவார பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைக்கோயில் மற்றும் அடிவார பகுதியில் பக்தர்கள் வெயிலில் வாடுவதை தவிர்க்கும் வகையில் பெரும்பாலான இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Tags : Massi festival ,Tiruchendur ,Palani , Masi festival, Tiruchendur, Palani, Alaimothiya crowd
× RELATED திருச்செந்தூர் கோயிலுக்கு ராஜகோபுரம்...