×

புறநகர் பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் தாம்பரத்தில் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும்: ஒன்றிய இணையமைச்சர் முருகன் தொடங்கி வைத்தார்

சென்னை : பொதுமக்களின் வசதிக்காக எழும்பூர்-மதுரை தேஜஸ் விரைவு ரயில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இந்த சோதனை ஓட்டத்தை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயிலில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்று வந்தனர். இந்த ரயில், தாம்பரத்தில் நிற்காமல்
செல்லும். இந்நிலையில், இதற்கு தீர்வாக தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதேபோல, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, எம்எல்ஏ ராஜா ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.


இந்நிலையில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் தேஜஸ் விரைவு ரயில், தாம்பரத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். அதேபோல மதுரையில் இருந்து திரும்பி வரும்போதும் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று, இரு மார்க்கத்திலும் தேஜஸ் ரயில்கள் நின்று பயணிகளை இறக்கி விட்டு செல்லும் என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை இதற்கான நிகழ்ச்சி தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கொடி அசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.


பின்னர் நிருபர்களை  சந்தித்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில் : தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்த ஆயிரம் கோடி நிதியில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களை விரிவுபடுத்த 120 கோடியில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற ஜூன் மாதத்திற்குள் டெண்டர் விடப்பட்டு மாஸ்டர் பிளானுக்காக பணிகள் தொடங்கப்பட உள்ளது. ₹1000 கோடியில் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது  என தெரிவித்தார்.

* எனக்கு ஒரு நீதி; அமைச்சருக்கு ஒரு நீதியா? டி.ஆர்.பாலு எம்.பி குற்றச்சாட்டு

தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில், இன்று முதல் நின்று பயணிகளை ஏற்றி சென்றது. இதற்காக நேற்று காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தது குறித்து டி.ஆர்.பாலு எம்.பி குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், நிகழ்ச்சி குறித்த நேரத்தில் நடைபெறவில்லை, ரயில்வே துறை அதிகாரிகள் இதை முறையாக செய்யவில்லை, மேடை இருட்டாக இருந்தது, எங்கள் பெயரெல்லாம் தெரியாத அளவு இருக்கைகள் போட்டு மறைக்கப்பட்டு இருந்தது.

நான் பேசத் தொடங்கிய போது ஐந்து நிமிடம் மட்டும்தான் பேச வேண்டும் என தெரிவித்தார்கள். ரயில் சேவையை கொண்டு வர எவ்வளவு பாடுபட்டோம் என்பதை ஐந்து நிமிடத்தில் பேச முடியாது. அதனால் நான் பேசவில்லை. ஆனால், ரயில் புறப்பட்டு சென்ற பிறகு ஒன்றிய அமைச்சர் பேசுவார் என அறிவிக்கிறார்கள். ரயில்வே அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் முறைகேடுகளை செய்துள்ளனர். ரயில்வே அதிகாரி ஆங்கிலத்தில் பேசுகிறார் மக்களுக்கு புரிகிற அளவில் தமிழில் பேசி இருக்க வேண்டும் என குற்றம் சாட்டினர்.



Tags : Tejas Express ,Tambaram ,Union Chief Minister ,Murugan , Tejas Express will stop at Tambaram to carry suburban commuters: Union Chief Minister Murugan inaugurates
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...