×

மகளிர் உலக கோப்பை டி20 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்

கேப் டவுன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பைனலில், தென் ஆப்ரிக்க அணியை 19 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லான்னிங் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.அலிஸ்ஸா ஹீலி, பெத் மூனி இருவரும் ஆஸி. இன்னிங்சை தொடங்கினர். ஹீலி 18 ரன், கார்ட்னர் 29 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மூனி 44 பந்தில் 8 பவுண்டரியுடன் அரை சதம் அடித்தார். கிரேஸ், மெக் லான்னிங் தலா 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, எல்லிஸ் பெர்ரி (7 ரன்), ஜார்ஜியா வேர்ஹம் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. பெத் மூனி 74 ரன் (53 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), தாஹ்லியா மெக்ராத் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில், மரிஸன்னே காப் தலா 2 விக்கெட், நான்குலுலெகோ, க்ளோ டிரையன் தலா 1 விக்கை கைப்பற்றினர்.இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. பிரிட்ஸ் 10, காப் 11, கேப்டன் சுனே லுவஸ் 2 ரன்னில் வெளியேற, தென் ஆப்ரிக்கா 10.4 ஓவரில் 54 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், லாரா - க்ளோ டிரையன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது.

லாரா 61 ரன் (48 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), டிரையன் 25 ரன் எடுத்து அவுட்டாக, தென் ஆப்ரிக்க போராட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து 19 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவ, ஆஸ்திரேலியா 6வது முறையாக மகளிர் உலக கோப்பையை முத்தமிட்டு அசத்தியது.


Tags : Women's World Cup ,Australia , Women's World Cup T20, Australia champions,
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...