×

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 70 புலிகள் இறப்பு: வனத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளில் 70 புலிகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில், புலிகள் இறப்பு விகிதத்தில் தமிழகம் தேசிய அளவில் 6வது இடத்தில் உள்ளது. விவசாயம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக கடந்த 50 ஆண்டு காலத்தில், வன விலங்குகளின் வாழ்விடங்களை அழித்ததுடன், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் நோய்களால், நாட்டின் 70 சதவீத விலங்குகள் அழிந்து விட்டன. இதற்கு நடுவே, பணத்திற்காகவும் இறைச்சிக்காகவும் விலங்குகள் சட்ட விரோதமாக கொல்லப்படுகின்றன. அண்மையில் தமிழகத்தில் புலி வேட்டையை அரங்கேற்றிய பவாரியா குழு சிக்கியது. சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் புலிகளை வேட்டையாட பதுங்கியிருந்த ஆறு பேர் கொண்ட கும்பலை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து பல்வேறு ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புலிகளின் நகம், தோல், எலும்புகள் உள்ளிட்டவை சீனா உள்ளிட்ட நாடுகளில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகின்றன. அதிக பணம் கிடைப்பதால் புலிகள் வேட்டையாடப்படுகின்றன. தமிழகத்தில் 264 புலிகள் உள்ளன. இது இந்திய அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதமாகும். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 70 புலிகள் இறந்துள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆனையம் கூறியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், புலிகள் சரணாலயத்தில் மட்டுமே 44 புலிகள் இறந்துள்ளன. ஏனைய புலிகள் சரணாலையத்திற்கு வெளியே இறந்துள்ளன. இயற்கையான இழப்புகள் இதில் குறைவு என்ற நிலையில் வேட்டையாடுதல் மற்றும் இயற்கைக்கு மாறான மரணங்கள் மூலம் அதிக அளவிலான புலிகள் இறந்துள்ளன. கேமராவில் பதிவான புலிகளின் புகைப்படங்கள் உள்ள போதிலும் வேட்டையாடப்பட்ட குழுவில் எவை என்று அடையாளம் காண முடியவில்லை. புலி வேட்டையில் ஈடுபடும் கும்பலை விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

* தமிழகத்தில் 264 புலிகள் உள்ளன. இது இந்திய அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதமாகும்.

Tags : Tamil Nadu , 70 tiger deaths in Tamil Nadu in last 10 years: Forest department information
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...