சேலம் மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியுமா?: ஏப்ரல் மாதம் ஆய்வு முடிந்ததும் தெரியும் என நிர்வாகம் தகவல்

சென்னை: சேலம் மாவட்டத்தில், மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது தொடர்பான  ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதத்தில் முடியும் என  மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு  அரசு அறிவிப்பின் படி, சென்னையை போல  தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான  கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ  ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில், கோவை மற்றும்  மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  

குறிப்பாக கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ  ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அவிநாசி சாலையில்  கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்யமங்கலம் சாலையில்  வலியம்பாளையம் பிரிவு வரையிலும் என 46 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ  ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 46 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ள முதற்கட்ட பணிகளுக்கு  ₹9,424 கோடி செலவும் ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு கடந்த சில  மாதங்களுக்கு முன்பே விரிவான திட்ட அறிக்கையும் மெட்ரோ நிர்வாகம் தமிழ்நாடு  அரசிடம் சமர்பித்தது.

கோவை மெட்ரோவை பொறுத்தவரை விரிவான சாத்திய கூறு  ஆய்வறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை இரண்டுமே சமர்பிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு டெண்டர் விட அனுமதி வழங்கியதும் கட்டுமான பணியை தொடங்க உள்ளது. அதேபோல  மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில்  திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறு ஆய்வு அறிக்கையை மட்டும்  தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவான  திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் நடைபெறும். மதுரை மெட்ரோவின்  விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். தற்போது  கோவை, மதுரையை தொடர்ந்து சேலம், திருச்சி , திருநெல்வேலியில்  மேற்கொள்ளப்பட்டு வந்த சாத்திய கூறு ஆய்வு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி  உள்ளது.

* சென்னை,கோவை, மதுரையை அடுத்து சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்ட மெட்ரோ பணிகளில் கவனம் செலுத்தி உள்ளது மெட்ரோ நிர்வாகம்.

Related Stories: