தாம்பரத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்பதை சாதனையாக சிலர் காட்டி கொள்வது சரியல்ல: டி.ஆர்.பாலு எம்பி கடும் கண்டனம்

சென்னை: நீண்ட தாமதத்துக்கு பிறகு,  ஒன்றிய அரசு  லட்சக்கணக்கான ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதை  பெரிய  சாதனையாக ஒரு சிலர் காட்டிக் கொள்ள முயற்சிப்பது சரியல்ல என்று டி.ஆர்.பாலு எம்பி கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி வெளியிட்ட அறிக்கை:

2019  மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே,  சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்  தாம்பரம் நிலையத்தில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை 30.5.2019 அன்று  ரயில் வாரியத் தலைவர்  வினோத் யாதவிடம் கடிதம் வாயிலாக வேண்டுகோள்  விடுத்தேன். 4.12.2019 அன்று  நாடாளுமன்ற மக்களவையில் இந்தக் கோரிக்கை தொடர்பாக எழுந்த விவாதத்தில்,  எனக்கும் அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கும்  கடும் வாக்குவாதம்  ஏற்பட்டு அவையில் அமளி உருவானது.

தமிழ்நாடு  சம்பந்தப்பட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து தமிழக எம்.பி.க்களின்  கோரிக்கைகளை தொகுத்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு 11.10.2021 அன்று  மீண்டும் கடிதம் எழுதப்பட்டது. இந்தக் கடிதத்திலும் தேஜஸ் எக்ஸ்பிரஸ்  தாம்பரத்தில் நிற்பது தொடர்பான விஷயமும் எழுப்பப்பட்டது. பலகட்ட  முயற்சிகளுக்குப் பிறகும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் பிரச்சனையில் நல்ல முடிவு  கிடைக்காத நிலையில் கடந்த டிசம்பர் 23ம் தேதி ஒன்றிய ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவை நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து, தேஜஸ் எக்ஸ்பிரஸ்  குறித்து வலியுறுத்தி வேண்டுகோள் கடிதம் அளித்தேன்.

நான் நான்கு ஆண்டுகளாக  அயராமல்  மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்  இருமார்க்கங்களிலும் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே துறை  உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தென் தமிழகத்துக்குச் செல்லும் பல லட்சம் ரயில்  பயணிகள் 26ம் தேதி(நேற்று) முதல் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து தேஜஸ்  எக்ஸ்பிரஸ் ரயில் சேவையின் மூலம் பயனடைவர்.

நீண்ட தாமதத்திற்கு பிறகு  ஒன்றிய அரசு லட்சக்கணக்கான ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதை  பெரிய சாதனையாக ஒரு சிலர் காட்டிக் கொள்ள முயற்சிப்பது சரியல்ல.  இல்லையென்றால், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் சேதுசமுத்திரத்  திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை துறைமுகம் - மதுரவாயல்  உயர்மட்ட விரைவுச் சாலை, ‘நீட்’ மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்சனை,  ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகளில்  இவர்கள் தலையிட்டு  செய்து காட்டியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை.  தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: