×

கேரள அரசியலில் அடுத்த பரபரப்பு சொப்னாவுடன் முதல்வரின் கூடுதல் தனி செயலாளர் வாட்ஸ் அப்பில் ஆபாச சாட்டிங்

திருவனந்தபுரம்: கேரளாவில்  ஏழைகளுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் ஊழல் நடந்து உள்ளதாக  கூறப்பட்ட புகாரில் ஒன்றிய அமலாக்கத்துறை இன்று விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்  அனுப்பி உள்ள நிலையில், கேரள முதல்வரின் கூடுதல் தனி செயலாளர் ரவீந்திரன் தங்க கடத்தல் ராணி சொப்னாவுடன் நள்ளிரவு வாட்ஸ் அப்பில் நடத்திய ஆபாச  சாட்டிங் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள  ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தங்கம்  கடத்தப்பட்டது. இந்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமீரக துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக  பணி புரிந்த சொப்னா, தூதரக மக்கள் தொடர்பு துறை அதிகாரி சரித்குமார் உள்பட  10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), சுங்க  இலாகா, ஒன்றிய அமலாக்கத்துறை ஆகியவை வழக்கு பதிவு செய்து விசாரணையை  தொடங்கின. இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த  கடத்தலில் முக்கிய மூளையாக செயல்பட்ட சொப்னாவுக்கும் கேரள முதல்வரின் முதன்மை  செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிவசங்கர் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் முதல்வர் பினராய் விஜயனின்  கூடுதல் தனி செயலாளரான ரவீந்திரனுக்கும் சொப்னாவுடன் தொடர்பு இருப்பது  தெரியவந்தது.  

இதற்கிடையே மத்திய அமலாக்கத்துறை நடத்திய  விசாரணையில், கேரளாவில் ஏழைகளுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்கும் லைப்  மிஷன் திட்டத்தில் இவர்கள் ஊழல் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த  திட்டத்தின்படி பாலக்காடு அருகே வடக்கஞ்சேரியில் ஒரு அடுக்குமாடி   குடியிருப்பு கட்டப்பட்டது. இதற்காக துபாயை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு  நிறுவனம் ₹19 கோடி நன்கொடையாக வழங்கியது. இதில் ₹4.50 கோடி சிவசங்கர்,  சொப்னா உள்பட சிலருக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக  தற்போது ஒன்றிய அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி  கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிவசங்கரை ஒன்றிய அமலாக்கத்துறை மீண்டும் கைது  செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் லைப் மிஷன் திட்ட ஊழலில்  முதல்வர் பினராய் விஜயனின் கூடுதல் தனிச் செயலாளரான ரவீந்திரனுக்கும்  தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று விசாரணைக்கு  ஆஜராகுமாறு கூறி அவருக்கு ஒன்றிய அமலாக்கத்துறை ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்து  உள்ளது.
 

இந்தநிலையில் ரவீந்திரனும், சொப்னாவும் நள்ளிரவில் வாட்ஸ்  அப்பில் ஆபாசமாக சாட்டிங் நடத்திய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.  இது கேரள அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவு சுமார்  11.30 மணிக்கு மேல் 2 பேரும் நடத்திய சாட்டிங் விவரங்கள் வருமாறு: நீங்கள் தூங்கி விட்டீர்களா?, மது குடிப்பீர்களா? என்று சொப்னாவிடம் ரவீந்திரன் கேட்கிறார். இல்லை  இன்னும் நான் தூங்கவில்லை. நான் எல்லா வகை மதுவும் குடிப்பேன் என்று  சொப்னா அதற்கு பதில் அளிக்கிறார். ஆனால் நான் மது அருந்துவதில்லை ....  ஆபாச வார்த்தை கூறி அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ரவீந்திரன் கூறுகிறார்.

ஆனால்  அதற்கு சொப்னா எந்த பதிலும் கொடுக்கவில்லை. இப்படி 2 பேரும் பல நாட்கள்  நள்ளிரவில் சாட்டிங் நடத்தி உள்ளனர். சொப்னாவுடன் ரவீந்திரன் நடத்தி உள்ள  இந்த ஆபாச சாட்டிங் கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.  இதற்கிடையே இன்று ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது  உள்பட கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அமலாக்கத்துறை தீர்மானித்து  இருப்பதாக கூறப்படுகிறது.



Tags : Kerala ,Chief Minister ,Additional Private Secretary ,Sobna , The next sensation in Kerala politics is obscene chatting on WhatsApp with Chief Minister's Additional Private Secretary Sobna
× RELATED கடந்த 10 வருடங்களில் எத்தனை...