×

அடிக்கடி குலுங்கும் அபாய நகரம்: துருக்கி சம்பவத்திற்குபின் பீதியில் அம்ரேலி மக்கள்

அகமதாபாத்: இந்தியாவில் பூகம்பத்தின் குவியலாக குஜராத்தின் அம்ரேலி மாவட்டம் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டில் இங்கு 400க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் பதிவாகி உள்ளன. இதனால், துருக்கி சம்பவத்திற்கு பிறகு அம்ரேலி மக்கள் மிகவும் பீதியில் உள்ளனர். துருக்கியில் சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அடுத்ததாக இந்தியா, பாகிஸ்தானில் இதுபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கேற்றார் போல் இந்தியாவில் சமீபகாலமாக அடிக்கடி நிலஅதிர்வுகள் தொடர்கதையாகி உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில், குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டாக 2 நாளுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் பூகம்பம் தினசரி வாழ்க்கை சம்பவமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவுராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி முதல் அடுத்த 48 மணி நேரத்தில் அம்ரேலியின் சவர்குண்ட்லா மற்றும் கம்பா தாலுக்காக்களில் 3.1 முதல் 3.4 ரிக்டர் அளவில் 4 நிலஅதிர்வுகள் பதிவாகி உள்ளன.

இது குறித்து காந்திநகரைச் சேர்ந்த நிலநடுக்கவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சுமேர் சோப்ரா கூறியதாவது:
புவித்தட்டுகளின் அமைப்பும் அதிகப்படியான நிலத்தடி நீர் மட்டம் ஆகியவை காரணமாக நில அதிர்வுகள் தொடர்கதையாக உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 400 லேசான நிலநடுக்கங்களை பதிவு செய்துள்ளோம், அதில் 86 சதவீதம் 2 ரிக்டர் அளவுக்கு கீழ் பதிவானவை. 13 சதவீதம் 2 மற்றும் 3 ரிக்டர் அளவில் இருந்தது. 5 நிகழ்வுகள் மட்டுமே. 3 ரிக்டர்களுக்கு மேல் சென்றது. மிகவும் மிதமான நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை மக்களால் உணரப்படுவதில்லை.

பொதுவாகவே நிலநடுக்கங்களை கணிக்க முடியாது. அம்ரேலி மாவட்டம் உட்பட சவுராஷ்டிராவின் பெரும்பாலான பகுதி நில அதிர்வு மண்டலம் மூன்றில் உள்ளது. இது மிதமான சேத அபாய மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இங்கு பெரிய அளவிலான சமதள முறிவு பகுதிகள் (ஃபால்ட் லைன்) இல்லை. எனவே அடிக்கடி நிலஅதிர்வு ஏற்படுவதால் பெரிய அளவிலான பூகம்பத்திற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அம்ரேலியில் 130 ஆண்டுக்கு முன், 1891ம் ஆண்டில் அதிகபட்சமாக 4.4 ரிக்டர் அளவில் மிக அதிக அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ஆனாலும், துருக்கி சம்பவத்திற்குப் பின் ஏற்படும் தொடர் நில அதிர்வுகள் அம்ரேலி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் இரவில் வீடுகளில் தூங்காமல் தெருக்களில் தஞ்சமடைவதாக அங்குள்ள மிதிலியா கிராம மக்கள் கூறுகின்றனர்.

3 மாநிலத்தில் நிலநடுக்கம்
நேற்று ஒரே நாளில் மேகாலயா, மகாராஷ்டிரா, குஜராத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. மேகாலயாவில் துரா பகுதியில் ரிக்டர் அளவில் 4.0 ஆகவும், மகாராஷ்டிராவில் கோலாப்பூரில் 3.6 ரிக்டர் அளவிலும், குஜராத்தின் ராஜ்கோட்டில் 4.3 ரிக்டர் அளவிலும் நிலஅதிர்வுகள் பதிவாகின. இதுதவிர ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Amreli ,Turkey , Frequent shaking danger city, Turkey incident, Amreli people in panic,
× RELATED பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…