×

கோடியக்கரை அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இரும்பு கம்பியால் கொடூர தாக்குதல்: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

காரைக்கால்: கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் மாவட்டம், கீழமீனவ கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சப்பன். இவருக்கு சொந்தமான படகில் காரைக்கால் காசாகுடி பகுதியை சேர்ந்த வீரக்குமார், வெற்றிவேல், காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த விஜேந்திரன், கார்த்திக், மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடி பகுதியைச்சேர்ந்த அர்ஜூனன், ராஜேந்திரன், கவி, மாணிக்கவாசகம், வானகிரி பகுதியைச் சேர்ந்த அறிவழகன், சுபாஷ், சஞ்சய் ஆகிய 11 மீனவர்கள் கடந்த 24ம்தேதி அதிகாலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகை சுற்றி வளைத்ததோடு, படகில் ஏறி இரும்புகம்பியால் மீனவர்களை தாக்கினர்.


படகில் இருந்த வலைகள், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்து சென்றனர். இலங்கை கடற்படையினரிடம் இருந்து உயிர் தப்பிய 11 பேரும் நேற்று காலை கரை திரும்பினர். இதில் காயமடைந்த அனைவரும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 24ம்தேதி அதிகாலை தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தரங்கம்பாடியை சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்குதல் மீன்களையும் பறித்து சென்றது. இதுதொடர்பாக இலங்கை கடற்படை மீது வழிப்பறி, மிரட்டுதல், கொடூர தாக்குதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி இருப்பது, மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மீனவர்கள் சங்கத்தினர், ஒன்றிய அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

* கடலில் தள்ளிவிட்டனர் மீனவர் அர்ஜூனன் கூறுகையில், இந்திய பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த  போது கண் இமைக்கும் நேரத்தில் வந்த இலங்கை கடற்படையினர், எங்களது படகில் ஏறி அனைவரையும் கண்மூடி தனமாக இரும்பு கம்பியால் தாக்கினர். படகில் இருந்த ₹5 லட்சம் மதிப்புள்ள மீன்களையும் பறித்தனர். பயத்தில் கத்தி அலறியபோது  படகில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள வலைகளை கடலில் தூக்கிப்போட்டதோடு, எங்களையும் கடலில் தள்ளிவிட்டு சென்றனர். இதில் நாங்கள் 2 மணி நேரம் கடும் குளிரில் கடலில் தத்தளித்தோம் என்றனர்.



Tags : Tamilnadu ,Kodiakkarai ,Sri Lanka Navy , Again cruel attack with iron rod on Tamilnadu fishermen in mid sea near Kodiakkarai: Sri Lanka Navy continues atrocity
× RELATED 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு…