×

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு: 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெற உள்ளது. 52 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 238 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல்  மாலை 6 வரை மக்கள் வாக்களிக்க உள்ளனர். ஈரோடு    கிழக்கு தொகுதி  எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததை அடுத்து, இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் 18ம்   தேதி வெளியானது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற்றது. மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, திமுக கூட்டணியில்   காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ்  இளங்கோவன், அதிமுக வேட்பாளராக   தென்னரசு, தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம்  தமிழர் கட்சியின்  வேட்பாளராக  மேனகா மற்றும் இதர கட்சியினர், சுயேட்சை  வேட்பாளர்கள் என 77  பேர்  களத்தில் உள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொகுதியில் களை கட்டிய பிரசாரம்  நேற்று   முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பிரசாரத்திற்கு   வந்த அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்த வெளி மாவட்ட   முக்கிய நிர்வாகிகள்,   தொண்டர்கள் தங்களது சொந்த ஊருக்கு நேற்று முன்தினம்   மாலையே சென்றனர்.   இதனால், ஈரோடு மாநகர்  இயல்பு நிலைக்கு  திரும்பியது.  போக்குவரத்து நெரிசல்  இன்றி, அனைத்து சாலைகளும் வெறிச்சோடி  காணப்பட்டது.
இடைத்தேர்தலுக்கான  வாக்குப்பதிவு இன்று (27ம் தேதி) நடைபெறுகிறது. 1  லட்சத்து 11  ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்களும், 1  லட்சத்து 16 ஆயிரத்து 497  பெண்  வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள்  25 வாக்காளர்களும் என  மொத்தம் 2  லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் வாக்கினை பதிவு  செய்ய  உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி  வரை தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம்.

வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்  தனது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால்  அங்கீகரிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். கூட்டம் அதிகம் இருப்பின் மாலை 6 மணிக்குள்  வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு,  வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க வருபவர்கள்  அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த  வாக்குச்சாவடிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முகவர்கள்  முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ்  பாதுகாப்புடன், சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள  வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.

மார்ச் 2ம் தேதி வாக்கு  எண்ணிக்கை நடத்தப்பட்டு மாலைக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவையொட்டி  வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் பலத்த   போலீஸ் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 32 இடங்களில் உள்ள  34 வாக்குச்சாவடிகள்   பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவ   வீரர்கள் பாதுகாப்பும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும்  போடப்பட்டுள்ளது.   பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  ஈடுபட உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் அசம்பாவிதங்களை  தடுக்க   ரோந்து வாகனங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். கிழக்கு   தொகுதிக்கு உட்பட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில்  தீவிர வாகன   தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    

* காலை 5.30 மணிக்கு  மாதிரி வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாதிரி  வாக்குப்பதிவு முன்கூட்டியே தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 77 வேட்பாளர்கள் உள்ளதால் ஒவ்வொரு வேட்பாளரின் சின்னத்திலும்   வாக்கு செலுத்த வேண்டுமெனில் கூடுதல் நேரம் ஆகும். எனவே மாதிரி   வாக்குப்பதிவினை காலை 5.30 மணிக்கு தொடங்கிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Erode East , Voting in Erode East today with tight security arrangements: 238 polling centers set up in 52 locations
× RELATED ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள்...