சென்னை: மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களால் ஆன சிற்றுண்டி வழங்க உத்தரவு அளித்துள்ளனர். சிறுதானியங்களில் தயாரித்த லட்டு, மிக்சர், கொழுக்கொட்டை, பிஸ்கட், சீடை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவு அளித்துள்ளனர். அனைத்து மின்வாரிய அலுவலர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு பறைசாற்றும் வகையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை நடப்பு 2023ஆம் ஆண்டினை அகில உலக சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.அரசுக் கல்லூரிகள், விடுதிகள், அரசு மருத்துவமனைகள், மதிய உணவுக்கூடங்கள், சிறைச்சாலைகள் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களில் சிறுதானியங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் சிறுதானியங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட, லட்டு, மிக்சர், கொழுக்கட்டை, பிஸ்கட், சீடை போன்ற உணவு வகைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன் படி இனி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிறுதானிய தின்பண்ட உணவுகளை வழங்குமாறு அனைத்து அலுவலர்களுக்கும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
