×

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை: தீவிர பாதுகாப்பில் ராணுவம்.!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயங்கரவாதிகள் பண்டிட் சமூகத்தை சேர்ந்த நபரை  சுட்டுக்கொன்ற நிலையில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தை சேர்ந்தவரை பயங்கரவாதிகள் இன்று காலை சுட்டுக்கொன்றனர். அச்சென் பகுதியை சேர்ந்த சஞ்சய் சர்மா (வயது 40) என்ற நபர் இன்று காலை 11 மணியளவில் அங்குள்ள சந்தை பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த பயங்கரவாதிகள் சஞ்சய் சர்மாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சஞ்சய் சர்மாவை மீட்ட அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் சர்மாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். பயங்கரவாத தாக்குதல் குறித்து தகவலறிந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். காஷ்மீரில் பண்டிட்களை குறிவைத்து மீண்டும் பயங்கரவாத தாக்குதல் அரங்கேறியுள்ளதால் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags : Pandit ,Pulwama ,Jammu ,Kashmir , A member of the Pandit community was shot dead by terrorists in Jammu and Kashmir's Pulwama: Army on heavy security.!
× RELATED சென்னையில் அமைக்கப்பட்டுள்ள...