×

வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழாவில் 150 ஆடுகள், 300 சேவல்களை பலியிட்டு 2,500 கிலோ அரிசியில் பிரியாணி விருந்து: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருமங்கலம்: வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழாவையொட்டி, 150 ஆடுகள், 300 சேவல்களை பலியிட்டு பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டியில் முனியாண்டி சாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பிரியாணி திருவிழா எனப்படும் பொங்கல் விழா. நேற்று முன்தினம் மாசி வெள்ளியையொட்டி பிரியாணி திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை பால் குடம் எடுத்து, வடக்கம்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர். பின்னர் முனியாண்டி சாமிக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 5 மணியளவில் நிலைமாலையுடன் கிராம மக்களின் பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. இரவு 8 மணிக்கு நிலைமாலையை சாமிக்கு சாற்றிய பின்பு பக்தர்கள் கொண்டு வந்த தேங்காயை உடைத்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இந்த பாரம்பரிய திருவிழாவில், மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முனியாண்டி விலாஸ் ஒட்டல் நடத்துபவர்கள் பங்கேற்றனர். திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் காணிக்கையாக 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட சேவல்களை கோயிலுக்கு வழங்கினர். இவற்றை கொண்டு பிரியாணி தயாரிக்கப்பட்டது. முன்னதாக நள்ளிரவில் முதலில் சக்திக்கிடாய் பலியிடப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய ஆடுகள் மற்றும் சேவல்கள் பலியிடப்பட்டு 2,500 கிலோ அரிசியில் அசைவ பிரியாணி தயாரிக்கும் பணிகள் விடிய, விடிய நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணியளவில் முனியாண்டி சாமி கோயிலில் உள்ள கருப்பசாமிக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து முனியாண்டி சாமிக்கு சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சுடச்சுட பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருவிழாவில் பங்கேற்ற கோவையை சேர்ந்த கவுசல்யா, ஹெலன் கூறுகையில், ‘‘எங்களுடன் பணியாற்றும் இதே ஊரை சேர்ந்த தோழி, இந்த திருவிழாவை பற்றி கூறி எங்களை அழைத்து வந்தார். பக்தர்கள் வழங்கிய ஆடுகள், சேவல்கள் மூலமாக பிரியாணி தயாராவதை பார்வையிட்டோம். இந்த வித்தியாசமான அசைவ பிரியாணி சுவையாக உள்ளது. கிராம மண் மணம் மாறாமல் திருவிழா நடந்து வருகிறது’’ என்றார்.

Tags : Vadakambatti Muniyandi ,festival , 150 Goats, 300 Roosters Sacrifice and 2,500 Kg Rice Biryani Feast at Vadakambatti Muniyandi Temple Festival: Thousands Participate
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...