×

சிங்கம்புணரி அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா: மீன்களை அள்ளிய கிராம மக்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் உள்ள பூதணி கண்மாயில் நேற்று நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று, போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பருவமழை கை கொடுத்த நிலையில் கண்மாயில் தண்ணீர் நிரம்பியது. தற்போது நெல் அறுவடை பணிகள் முடிந்த நிலையில், கண்மாயில் உள்ள தண்ணீர் குறைந்து விட்டது. இதையடுத்து கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது.

இதில் சூரக்குடி சுற்று கிராமங்களான முறையூர், கோயில்பட்டி, காளாப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம மக்கள் தங்கள் கொண்டு வந்த கச்சா, பரி, ஊத்தா, வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கொண்டு மீன்களை போட்டி போட்டுக் கொண்டு உற்சாகமாக பிடித்தனர். இதில் கெழுத்தி, ஜிலேபி, கட்லா, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்தன. மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Kanmail ,Singhamburnari , Kanmayil Fishing Festival near Singampunari: Villagers netting fish
× RELATED மானாமதுரை அருகே அழகாபுரி கண்மாயை தூர்வார வேண்டுகோள்