×

திருத்தங்கலில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்; ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்ற வேண்டும்:சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சிவகாசி: திருத்தங்கலில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் முக்கிய வழிகளில் விழிபிதுங்கும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிச் செல்லும் மாணவர்கள் முதல் கடைநிலை அலுவலக ஊழியர்கள் வரை பாதிக்கின்றனர். குறுகிய இடத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட திருத்தங்கல் மண்டலம் விரிவாக்கத்தில் முதன்மையாக உள்ளது. தினமும் குடியிருப்பு வீடுகள் பெருகி வருகின்றன. அதே போல் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மண்டல பகுதிகளில் அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. இங்குள்ள பழையசாட்சியாபுரம் சாலை, கே.கே.நகர், பள்ளப்பட்டி சாலை முறையான சாலை வசதி இல்லை. குண்டும், குழியுமான ரோட்டால் தினமும் மக்கள் பாதிக்கின்றனர்.

சிறிது மழைக்கே குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதே போல ரதவீதி, விருதுநகர் ரோடு, வெள்ளையாபுரம் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன. பல கடைகள் நிரந்தர ஆக்கிரமிப்பு கடைகளாக நிறுவப்பட்டுள்ளன. இதுதவிர மேற்கூரை, வாறுகால் பாலம் ஆக்கிரமிப்பு என மாநகராட்சி அனுமதியில்லாமல் பலரும் பொது சொத்தினை ஆக்கிரமித்து வருகின்றனர். பல்வகை ஆக்கிரமிப்பால் வாகனங்கள் செல்வதில் நெரிசல் ஏற்படுகிறது. விருதுநகர் ரோட்டில் அம்பேத்கர் சிலையில் இருந்து மாரியம்மன் கோயில் வரை கடைகளின் மேற்கூரை, ஸ்டால்கள் அமைத்து ரோட்டினை குறுகிய இடத்திற்கு கொண்டு சென்று விட்டனர். 35 அடி ரோ டு 20 அடி ரோடாக மாறிப்போனது. அண்ணா சிலை அருகே ஆட்டோ நிறுத்தம் செயல்படுகிறது. இங்கு தான் வெளியூர் பஸ்கள் நின்று செல்கின்றன. காலை, மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆட்டோக்கள் நிறுத்துவதால் பஸ்கள் நிற்க வழியில்லை. அதே போல் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருப்பதால் இந்த ரோட்டில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருத்தங்கல் மண்டலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. நெடுஞ்சாலைத் துறையினரும் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பதால் ஆக்கிரமிப்பு பிரச்னை பெரும் தலை வலியாக மாறி வருகிறது. நிம்மதியாக பாதசாரிகள், வாகன ஓட்டிகள் செல்ல முடிவதில்லை. ஒரு கிலோ மீட்டர் ரோட்டினை கடக்க 15 நிமிடத்திற்கு மேலாகிறது. திருத்தங்கல் செக்போ ஸ்ட்டினை கடந்தால் தான் வாகன ஓட்டிகள் நிம்மதியாக செல்ல நேரிடுகிறது. ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எட்டினால் மட்டுமே மக்கள் நிம்மதியாக ரோட்டில் பயணிக்க முடியும்.

Tags : Thiruthangal , Increasing traffic congestion in Thiruthangal; Encroachments must be removed immediately: Social activists insist
× RELATED ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை திருட்டு