மேட்டூர் நீர்த்தேக்கத்தில் அரியவகை பறவை இனங்கள் முகாம்: வேட்டையை தடுக்க வலியுறுத்தல்

மேட்டூர்: மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் முகாமிட்டுள்ள அரியவகை பறவைகளை, வேட்டைக்காரர்களிடம் இருந்து காப்பாற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவையின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா மற்றும் பிறநாடுகளில் காணப்படும் அரியவகை பறவைகள், மேட்டூர் நீர்தேக்கத்தின் பல பகுதிகளில் முகாமிட்டுள்ளன. மேட்டூர் நீர்தேக்கம் 15,346 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. பறவைகளுக்கு தேவையான உணவு மற்றும் வாழ்வதற்கான தட்பவெட்பம் நிலவுவதால், காவிரி கரைகளில் அரியவகை பறவைகள் கூடுகட்டி தங்கி உள்ளன. பாலாறு, அடிப்பாலாறு, கோட்டையூர், செட்டிப்பட்டி, பண்ணவாடி பகுதிகளில் ஏராளமான பறவையினங்கள் காணப்படுகின்றன. இவற்றில் வெள்ளை வயிறு கொண்ட ஹெரான், அகலவாயன், மஞ்சள் மூக்குநாரை, அரிவாள் மூக்கன், கருந்தலை அரிவாள் மூக்கன் போன்ற நாரைகள் முக்கியமானவை.

வெள்ளை வயிறு ஹெரான் வடகிழக்கு இந்தியா, பூட்டான் முதல் வடக்கு மியான்மர் வரை வற்றாத ஆறுகள் ஈரம் நிறைந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்து வருகிறது. அழிந்து வரும் பறவையின பட்டியலில் உள்ளது. இப்பறவை வாழ்ந்து வந்த இடங்கள் அழிக்கப்பட்டு வருவதாலும் மனித இடையூறுகளாலும் மெல்ல அழிந்து வருகிறது. இப்பறவை பெரும்பாலும் அடர்சாம்பல் நிறத்தில் வெள்ளை தொண்டையுடன் காணப்படும். மேட்டூர் நீர் தேக்கப்பகுதியில் காணப்படும் இப்பறவை இமயமலை அடிவாரத்தில் வாழும் ஹெரான் இனமாகும். அகலவாயன் நீர்நிலைகளை சார்ந்திருக்கும் நாரை குடும்பத்தை சார்ந்த பெரிய பறவையினமாகும். இந்திய துணைகண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் பரவலாக காணப்படுகிறது. இது ஓரிடத்தில் தங்கும் பறவையாகும். ஆனாலும் வெகு தொலைவு பறந்து சென்று இரை தேடக்கூடியது. இப்பறவைகள் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் கூடுகட்டி வசித்து வருகின்றன.

காலை நேரங்களில் பாலாறு, பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பறந்து சென்று இரை தேடி மாலையில் கூட்டுக்கு திரும்புகின்றன. மஞ்சள் மூக்கு நாரை இதனை வண்ணநாரை, செவ்வரிநாரை, சங்குவளை நாரை என ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெயரில் அழைக்கப்படுகிறது. இவ்வகை நாரைகள் பெருங்கூட்டமாக இரை தேட செல்வதில்லை. சிறு சிறு குழுக்களாக குறைந்த எண்ணிக்கையில் இரைதேட செல்கின்றன. இவ்வகை பறவைகள் இந்திய துணை கண்டத்திலும், தென் இமயமலைப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை மரங்களில் கூடுகட்டி வசிக்கின்றன. வெள்ளை அரிவாள் மூக்கன் இந்தியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பறவையாகும். தென்மேற்கு ஆசிய பகுதி, வட இந்தியா, வங்காள தேசம், நேபாளம், இலங்கை, ஜப்பான் போன்ற கீழ்திசை நாடுகளிலும் பரவி உள்ளது.

பெரிய மரக்கிளைகளின் மேல் கூடுகட்டி வசிக்கும். 2 முதல் நான்கு முட்டைகள் வரை இடக்கூடியது. நீர்நிலைகள் அருகில் உள்ள புல்வெளிகளில் காணப்படும் பூச்சிகள், சிறிய தவளைகளே இதற்கு இரையாகும். தனது மென்மையான பாதங்களைகொண்டு குறைவான நீரிலும் தனது வளைந்த அலகால் உணவுகளை பிடிக்கிறது. இவை உணவை தேடும் போது மெல்லிய ஒலி எழுப்புகிறது. உடல் முழுவதும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் அலகு மட்டும் கருமையாக காணப்படுகிறது. மேட்டூர் காவிரி கரைகளில் இதுபோல் ஏராளமான அரியவகை பறவைகள் காணப்படுகின்றன. சிலர் இந்த அரியவகைப் பறவைகளை வேட்டையாடி வருகின்றனர். வேட்டைக்காரர்களிடமிருந்து அரியவகை பறவைகளை காக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவையின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: