தாம்பரத்தில் நின்று சென்ற தேஜஸ் விரைவு ரயில்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இன்று  தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. இதனை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் இருமார்க்க தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வந்துள்ளது.

இதனை தமிழ்நாடு எம்.பிக்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வந்தனர். அதேபோல் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி கோரிக்கை வைத்திருந்தார். இதன் அடிப்படையில், சென்னையிலிருந்து மதுரைக்கு இருமார்க்கத்திலும் இயக்கக் கூடிய தேஜஸ் விரைவு ரயில், இன்று முதல் (26.02.2023) தாம்பரத்தில் நின்று செல்ல ஒன்றிய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. இதனை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். திமுக எம்பிகளின் தொடர் அழுத்தத்தால் இது சாத்தியமானதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

மேலும், பயணிகளின் வரத்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில், தொடர்ந்து இந்த தேஜஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் காலை 6.25 முதல் 6.27 வரையும், இரவு 8.38 முதல் 8.40 வரை 2 நிமிடங்கள் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: