×

திரு.வி.க நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3 மேம்பால பணிகள் ஏப்ரல் மாதம் முடியும்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில், திரு.வி.நகர், அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் நடந்து வரும் 3 மேம்பால பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதல்வர், சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தங்குதடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில், வருங்கால போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் மாநகரின் முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் திரு.வி.க நகர் மண்டலம், பெரம்பூர் நெடுஞ்சாலையில் புளியந்தோப்பு பகுதியை இணைக்கும் வகையில் ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே ஏற்கனவே இருந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு ரூ.43.46 கோடியில் புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இத்துடன் மழைக்காலங்களில் இச்சாலையில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் குக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதேபோல், புளியந்தோப்பு பகுதியில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் டாக்டர் அம்பேத்கர் சாலையிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் சுமார் 282 மீ நீளம் மற்றும் 22.70 மீ அகலம் உடையது. உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, இருபுறமும் சாய்வுதளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், சாலை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், அண்ணாநகர் நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே சந்திக்கடவு எண். 1க்கு மாற்றாக வடக்கில் கொளத்தூர் பிரதான சாலையையும் தெற்கில் ஐ.சி.எப். சாலையையும் இணைக்கும் வண்ணம் இருவழி மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.61.98 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த மேம்பாலம், கொளத்தூர் பகுதியை அண்ணா நகர் பகுதியுடன் இணைக்கும் முக்கிய இணைப்பு பாலமாகும். இந்த மேம்பாலத்தினால் கொளத்தூர், ஜி.கே.எம். காலனி, பெரியார் நகர், கொரட்டூர், பாடி, ஐ.சி.எப். அண்ணா நகர் மற்றும் பெரம்பூர் பகுதி மக்கள் மிகவும் பயனடைவர். இது, சுமார் 500 மீ நீளம் மற்றும் 8.50 மீ அகலமுடையது. ஐ.சி.எப். பகுதியில் சாய்வுதளம் அமைக்கப்பட்டு, சாலைப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது கொளத்தூர் பக்கம் சாய்வுதளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அடுத்ததாக, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையத்திற்கு போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் பயணிக்க ரூ.26.00 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆகாய நடைமேம்பாலம் (ஸ்கை வால்க்) அமைக்கும் பணிகள்  நடந்து வருகிறது. இந்த நடைமேம்பாலம் 600 மீ நீளம் மற்றும் 4.20மீ அகலமுடையது. இவற்றில் நடைமேம்பாலம், பேருந்து நிலைய படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), மின்தூக்கி (லிப்ட்), ரயில்வே நிலைய இணைப்பு, ரங்கநாதன் தெருவில் படிக்கட்டுகள் ஆகியவை முடிக்கப்பட்டுள்ளது. தற்போது ரயில் நிலையம் அருகில் மின்தூக்கி அமைக்கும் பணி, விளக்குகள், சிசிடிவி, பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகில் ஒப்பனை அறைகள், ஜெனரேட்டர் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த பகுதிகளில் நடந்து வரும் மூன்று மேம்பாலப் பணிகளும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம் அருகில் மின்தூக்கி அமைக்கும் பணி, விளக்குகள், சிசிடிவி, பேருந்து நிலையம் மற்றும் ஒப்பனை அறைகள், ஜெனரேட்டர் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Tags : VK Nagar ,Anna Nagar ,Kodambakkam , Mr. VK Nagar, Anna Nagar, Kodambakkam, Flyover Works, Corporation Information
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...