சென்னை, புறநகரில் சாலையில் திரியும் அவலம் குழந்தைகளை கடித்து குதறும் தெருநாய்கள்: காவல் துணை ஆணையரை மக்கள் முற்றுகை

அம்பத்தூர்: கொரட்டூர் வாட்டர் கெனால் ரோட்டில் பிரபலமான குடியிருப்பில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்திற்கு உள்ளே 80க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சிலர் வளர்ப்பதாகவும், குழந்தைகள் வெளியே வரும்போது, பெற்றோர் கண்முன்னே குழந்தையை கடித்து குதறுவதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டினர். பலமுறை புகார் அளித்தும்,  மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொரட்டூர் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட முயன்றனர். அப்போது, காவலர்கள் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மீது குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பதை அறிந்த குடியிருப்புவாசிகள், அந்த மண்டபத்திற்குச் சென்று செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணனை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்களிடம் குறைகளைக் கேட்ட மணிவண்ணன், அம்பத்தூர் உதவி ஆணையர் கனகராஜ், கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி விரைவில் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர். இதுபோல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நாய்களையும் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: