ரஷ்யா விவகாரத்தில் ஒருமித்த கருத்தின்றி முடிந்த ஜி20 கூட்டம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களின் மாநாடு பெங்களூருவில் நேற்று 2வது நாளாக நடந்தது. இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்தியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், சவால்கள் குறித்து விவாதிக்கவே இந்தியா விரும்பியது. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் உக்ரைன்-ரஷ்யா போர் ஓராண்டு நிறைவையொட்டி, ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்க இம்மாநாட்டை பயன்படுத்த முயன்றன.

இறுதியில் உக்ரைன் போருக்கு கடும் கண்டனம் தெரிவித்த பெரும்பாலான நாடுகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார தடை, விலைவாசி உயர்வு, விநியோக பாதிப்பு, அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பின்மை, உயர்ந்து வரும் நிதி ஸ்திரத்தன்மையின்மை உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து மட்டுமே கருத்து தெரிவித்தன. ஜி-20 அமைப்பு பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் அமைப்பல்ல என்ற போதிலும், உலக பொருளாதாரத்தில் பாதுகாப்பு பிரச்னை பாதிப்பு ஏற்படுத்தியதால் அது குறித்து மட்டும் சிறிது விவாதிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் ரஷ்யா, சீனா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை, என்று ஜி-20 அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால், ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களின் ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படாமலேயே இந்த கூட்டம் முடிவடைந்தது.

Related Stories: