×

பாக்.கில் கடும் பொருளாதார நெருக்கடி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்?.. அமைச்சர்களுக்கு கட்டுப்பாடு

இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டு அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் அமைச்சர்கள் விமானத்தில் முதல் வகுப்பு கட்டண பிரிவில் பயணிக்கக்கூடாது என்றும், வெளிநாடுகளில் நட்சத்திர விடுதிகளில் தங்கக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது.

இது மட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கான அடுத்த மாதத்திற்கான சம்பளம் உட்பட அனைத்து நிதி விடுவிப்புக்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கணக்காளர் ஜெனரலுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. நிதி மற்றும் வருவாய் அமைச்சகம், மத்திய அமைச்சகங்கள், அதன் பிரிவுகள், மற்றும் இணைக்கப்பட்ட துறைகளின் சம்பளம் மற்றும் அனைத்து நிதிகளையும் மறுஅறிவிப்பு வரும்வரை நிறுத்துமாறு பாகிஸ்தானின் வருவாய் கணக்காளர் ஜெனரலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக அந்நாட்டின் நிதிஅமைச்சர் இஷாக் தாரிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘ஊடக தகவல்கள் பொய்யாக இருக்கக்கூடும். எனவே தகவலை உறுதி செய்த பின் தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இதனிடையே பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களுக்கான அடுத்த மாதத்துக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுவிட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Pakistan , Pakistan, economic crisis, salary of civil servants, control of ministers
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...