×

மேகாலயா, நாகலாந்தில் நாளை வாக்குப்பதிவு: ஷில்லாங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

ஷில்லாங்: மேகாலயா, நாகலாந்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மேகாலயாவின் ஷில்லாங் தொகுதியில் வேட்பாளர் மறைவால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகலாந்தில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேகாலயாவை பொருத்தவரை 60 இடங்களுக்கு பாஜ, காங்கிரஸ் உட்பட 11 கட்சிகளைச் சேர்ந்த 369 பேர் போட்டியிடுகின்றனர். நாகலாந்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு 183 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரு மாநிலங்களிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இங்கு, பாஜ, காங்கிரஸ், உட்பட ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஷில்லாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக கட்சியை சேர்ந்த எச்டிஆர். லிங்டோ, மாரடைப்பினால் கடந்த 20ம் தேதி காலமானார்.

இதனால், அத்தொகுதிக்கான தேர்தலை தற்போது ஒத்தி வைப்பதாகவும் தேர்தல் ஆணையம் மறுதேர்தலுக்கான தேதியை அறிவித்தவுடன் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்று அம்மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இதனால் அங்கு 59 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. அதே போல், நாகலாந்தில் ஜூன்ஹெபெட்டோ மாவட்டத்தின் அகுலுடோ தொகுதியில் பாஜ.வை சேர்ந்த கசேட்டோ கினிமி போட்டியின்றி எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அங்கும் 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது.

Tags : Meghalaya, Nagaland , Voting tomorrow in Meghalaya, Nagaland, Shillong constituency, election postponed
× RELATED நாகாலாந்து, மேகாலயாவில் நாளை பிரசாரம்...