ஒன்றிய அமைச்சர் கார் மீது தாக்குதல்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒன்றிய அமைச்சர் நிஷித் பிரமானிக் கார் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கூச்பெகர் மாவட்டத்தில் உள்ள தின்ஹட்டா பகுதியில் ஒன்றிய அமைச்சர் நிஷித் பிரமானிக் கார் நேற்று சென்று கொண்டு இருந்தது. அமைச்சர் வருகை அறிந்து அங்கே திரண்டிருந்த சிலர் அவருக்கு கருப்பு கொடி காட்டியதாக கூறப்படுகின்றது. மேலும் கார் மீது கல் வீச்சிலும் ஈடுபட்டுள்ளனர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி விரிசலடைந்தது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் பிரமானிக் கூறுகையில், ‘‘காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களாக செயல்பட்டு வன்முறையில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கின்றது. திரிணாமுல் ஆதரவாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் குற்றவாளிகளை பாதுகாக்கின்றது’’ என்றார். இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.

Related Stories: