கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், 20 பவுன் நகையை திருப்பிக் கேட்ட பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த மாவட்ட பாஜ செயலாளரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி அருகே, பெரியஜெட்டுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (40). கணவர் இறந்துவிட்டார். இவர் மீன் விற்பனை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மன்னன்(எ) சிவக்குமார்(44). இவர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜ செயலாளராக உள்ளார். ஓட்டலும் நடத்தி வருகிறார். இந்நிலையில், மன்னனுக்கு மேனகாவுடன் தகாத உறவு ஏற்பட்டது. அடிக்கடி வீட்டுக்கே சென்று வந்துள்ளார்.
இதனிடையே, குழந்தைகள் பெரியவர்களாகி விட்டதால், இனிமேல் வீட்டுக்கு வர வேண்டாம் என மேனகா தெரிவித்துள்ளார். ஆனால், அவர் பொருட்படுத்தாமல் அடிக்கடி சென்று தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையே, மன்னனிடம் தான் கொடுத்த 20 பவுன் நகையை, மேனகா திருப்பிக் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, மீன் கடைக்கு சென்ற மன்னன், அங்கிருந்த மேனகாவிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை ஆபாசமாக பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில், மேனகா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மன்னனை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையிலடைத்தனர்.
