×

வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு

சென்னை: வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு ஒன்றிய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்கிடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, உடன்குடி பனங்கற்கண்டு, சோழவந்தான் வெற்றிலை, மார்த்தாண்டம் தேன் உட்பட 43 உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. புதிதாக வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கும் இப்போது வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் தமிழகம் 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

முள்ளு கத்தரிக்காய்: வேலூர் மாவட்டம் இலவம்பாடியில் அதிகளவில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய், மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, கணியம்பாடி வட்டாரங்களில் விளைவிக்கப்படுகிறது. அறை வெப்ப நிலையில் 3 நாட்களும், குளிரூட்டப்பட்ட சுற்றுப்புறத்தில் 8 நாட்களும் கெடாமல் இருக்கும். 140-145 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு 40 முதல் 45 டன் மகசூல் தரும். முள்ளு கத்தரிக்காயில் புரதம் மற்றும் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளன. இதுமற்ற கத்தரி வகைகளை விட சுவையாக இருக்கும். முன்னாள் முதல்வர் கலைஞர் வேலூர் உழவர் சந்தையை தொடங்கி வைத்தபோது, வேலூர் முள்ளு கத்தரிக்காயை குறிப்பிட்டு அதன் அரிய குணங்களை எடுத்துக்கூறினார். மேலும் வேலூருக்கு கலைஞர் வந்தால், பரிமாறும் உணவில் இலவம்பாடி கத்தரிக்காய் முக்கிய இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் குண்டு மிளகாய்: ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஏற்றுமதியாகும் மிளகாய் வத்தல், மிளகாய்த்தூள், மிளகாய் சாஸ், மிளகாய் எண்ணெய், ஊறுகாய் வகைகள் போன்ற பொருட்களுக்கு, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை, சீனா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மற்றும் சவுதி அரேபியா, துபாய், கத்தார் போன்ற அரபு நாடுகள், இந்தியர்கள் குறிப்பாக, தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது.

சம்பா மிளகாய்களை காட்டிலும் அதிக மகசூல் தரக்கூடியது குண்டு மிளகாய், அடர்ந்த சிவப்பு நிறத்தில், ருசி, அதிக காரத்தன்மை, மருத்துவ குணங்களோடு உள்ள இந்த வகை மிளகாய் மாவட்டத்தில் பாரம்பரியமாக பயிரிட்டு வருவதால் ராம்நாடு (ராமநாதபுரம்) முண்டு என அழைக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 ஆயிரம் ஏக்கரில் மானவாரியாகவும், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் இறவை சாகுபடியாகவும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மிளகாயில் விட்டமின் சி, கே நிறைந்து, பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் சத்துக்கள், சிலிக்கான் அதிகம் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுகிறது.

Tags : Ramanathapuram ,Chilli , Geocode for Vellore Thorny Eggplant, Ramanathapuram Gundu Chilli
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...