ஆண்டிமடம்: அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய பட்டா சிட்டா நகல்களை இணைக்கும்படி கூறப்பட்டுள்ளது. ஆனால், சிட்டா அடங்கல் நகலை கொடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக நேற்று முன்தினம் அரியலூரில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர். உடனே லஞ்சம் கேட்பவர்கள் குறித்து விவரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலர் பொற்செல்வி சிட்டா அடங்கல் கொடுப்பதற்கு ரூ.1000 லஞ்சம் கேட்கும் வீடியோ வைரலானது. இதன் எதிரொலியாக நேற்று உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம், விஏஓ பொற்செல்வியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.