விழுப்புரம் ஆசிரம விவகாரத்தில் கைதான நிர்வாகி உட்பட 8 பேரை சிபிசிஐடி விசாரிக்க அனுமதி: 3 நாள் காவலில் எடுத்து சென்றனர் மாயமானவர்கள் குறித்து கிடுக்கிப்பிடி

விழுப்புரம்: ஆசிரம வழக்கில் கைதான நிர்வாகி ஜூபின்பேபி உள்பட 8 பேரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின்பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் நடத்திய அன்புஜோதி ஆசிரமத்தில் பலர் காணாமல் போனதும், 2 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நிர்வாகி ஜூபின்பேபி அவரது மனைவி மரியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் மேலும் தகவல்களை பெறுவதற்கும், மாயமானவர்களை கண்டுபிடிக்கவும் சிறையில் உள்ள ஜூபின்பேபி உள்ளிட்டோரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி கடந்த 23ம் தேதி இரவு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி புஷ்பராணி நேற்று விசாரித்து, வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜூபின்பேபி, இவரது மனைவி மரியா, பணியாளர்கள் பிஜ்ஜூமோகன், கோபிநாத், முத்துமாரி, பூபாலன், சதீஷ், அய்யப்பன் ஆகிய 8 பேரையும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் கூறினார்.

இதையடுத்து நேற்று காலை 11.45 மணிக்கு 8 பேரையும் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர்களிடம், ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனவர்கள் விவரங்கள் குறித்தும், பலாத்காரத்திற்குள்ளானவர்கள் குறித்தும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரமத்தில் எரிக்கப்பட்ட பிணங்கள் குறித்தும் கிடுக்கிப்பிடியாக விசாரிக்கின்றனர். 8 பேரையும் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்திற்கும் அழைத்துச்சென்று விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* கையில் என்ன கட்டு?

ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேரும் நேற்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஜூபின்பேபி கையில் கட்டு போட்டிருந்ததை பார்த்த நீதிபதி புஷ்பராணி, என்ன ஆச்சு என்று கேட்டார். அதற்கு ஆசிரமத்தில் குரங்கு கடித்ததால் சிகிச்சை பெற்று கையில் கட்டுபோட்டுள்ளதாக தெரிவித்தார். சிபிசிஐடி போலீசார், கைது செய்வதற்கு முன்பாக இது நடந்துள்ளது என்று கூறி அதற்கான ஆவணங்களை நீதிபதியிடம் வழங்கினர்.

Related Stories: