தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: சுற்றுலாத்துறை இயக்குநர் தொடங்கி வைத்தார்

சென்னை: தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருச்சக்கர வாகன பேரணியை சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று (பிப்.25ம் தேதி) தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆக்சன்டே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு இருச்சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினர். சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருக்சக்கர வாகன பேரணியானது தீவுத்திடலில் தொடங்கி, அண்ணாசாலை, சைதாப்பேட்டை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் வழியாக முதலியார் குப்பம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் படகு குழாமை சென்றடையும். இந்த பேரணியில் 120க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனத்துடன் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி கூறியதாவது: தமிழ்நாட்டை சுற்றுலாத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உருவாக்கி வருகிறார். அதனடிப்படையில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடுமலை ஆகிய முக்கிய மலைப்பகுதி சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் மக்கள் சென்று வருவதைப்போல், கொல்லிமலை, ஏலகிரிமலை, ஜவ்வாதுமலை ஆகிய மலைகளுக்கும்  அதிக அளவில் செல்லும் வகையில் சுற்றுலாத்துறையின் சார்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்தலங்கள் குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: