×

வசூலித்த பணத்தை கையாடல் செய்ததால் ஆத்திரம் கலெக்‌ஷன் ஊழியரை அடித்துக்கொன்ற துணை நடிகர், பைனான்சியர் உள்பட 4 பேர் கைது: உணவு, தண்ணீர் கொடுக்காமல் சித்ரவதை; திரைத்துறையில் பரபரப்பு

சென்னை: வசூலித்த பணத்தை கையாடல் செய்த கலெக்‌ஷன் ஊழியர் ஒருவரை சினிமா துறையை சேர்ந்த சிலர் ஒன்றாக சேர்ந்து தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும், அந்த நபரிடம் இருந்து பணம் வராது என்று தெரிந்து கொண்ட அந்த சினிமா கும்பல், கலெக்‌ஷன் ஊழியருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமலும் அடித்தே கொன்றுவிட்டனர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, துணை நடிகர், சினிமா பைனான்சியர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல ஓட்டலுக்கு சாப்பிட வந்த நபரை சரமாரியாக தாக்கி, ஒரு மர்ம கும்பல் காரில் கடத்தி செல்வதாக கோயம்பேடு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஒரு மர்ம கும்பல் ஒருவரை சரமாரியாக தாக்கி தரதரவென இழுத்துச் சென்று காரில் கடத்தி செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், முகப்பேரில் உள்ள ஒரு வீட்டில் ஒருவரை அடைத்து வைத்து, மர்ம கும்பல் அவரை சித்ரவதை செய்வதாக நொளம்பூர் போலீசாருக்கு நேற்று முன்தினம்  தகவல் கிடைத்தது. இந்நிலையில் போலீசார் வருவதை அறிந்த கடத்தல் கும்பல், காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டது. அங்கு சென்ற போலீசார், அந்த வீட்டை சோதனையிட்டபோது, சுவர் மற்றும் தரையில் ஆங்காங்கே ரத்தக்கறைகள் படிந்திருப்பதை பார்த்தனர். இது குறித்து ேபாலீசார் அக்கம் பக்கம் நடத்திய விசாரணையில், ‘‘இது சினிமா  பைனான்சியர் வெங்கட்ராமன்(எ) சோட்டா வெங்கட்(48) என்பவரின் வீடு. அவருடன் 3 பேர் தங்கியிருந்தனர் என்ற தகவல் மட்டும் கிடைத்தது.

இந்த தகவலை வைத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணை செய்தனர். அதில், கோயம்பேட்டில் இருந்து காரில் கடத்தப்பட்ட நபரை இந்த வீட்டில் அடைத்துவைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கோயம்பேடு துணை ஆணையர் குமார், உதவி ஆணையர் ரமேஷ்பாபு ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார், கடத்தலுக்குப்பயன்படுத்தப்பட்ட கார் நம்பரை வைத்து விசாரணை செய்ததில், அது சினிமா பைனான்சியர் வெங்கட்ராமனின் பெயரில் பதிவாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வெங்கட்ராமன், அவரது மனைவி மற்றும் அவரது தங்கை உட்பட உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், வெங்கட்ராமன் மனைவியின் செல்போனில் இருந்து, அவரை போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது பேசிய வெங்கட்ராமனிடம் போலீசார், ‘பாபுஜியை கொலை செய்தது நீதான்’’ என்று எப்ஐஆரில் முக்கிய குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நீ வரவில்லை என்றால், உனது மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் கைது செய்யப்படுவார்கள்’’ என்று தெரிவித்தனர். இதனால் பயந்துபோன அவர், ‘‘என் குடும்பத்தில் உள்ளவர்களை விட்டுவிடுங்கள், நானே காவல் நிலையம் வருகிறேன்’’ என்று சொன்னார். பின்னர், வெங்கட்ராமன்,  சினிமா  பைனான்சியர்களான கணபதி என்ற சரவணன்(29), திலீப்(30) மற்றும் துணை நடிகரான கோபி என்ற நவீன்(47)  ஆகிய 4 பேர் கோயம்பேடு  காவல்நிலையத்தில் நேற்று நள்ளிரவு சரணடைந்தனர். இதன்பிறகு, வெங்கட்ராமன் மனைவி மற்றும் உறவினர்களை போலீசார் விடுவித்தனர்.

அப்போது போலீசாரிடம் வெங்கட்ராமன் கூறியதாவது; ‘‘சினிமா பைனான்சியரான என்னிடம் பாபுஜி (50), கலெக்சன் ஏஜெண்டாக இருந்தார். கலெக்‌ஷன் பணத்தை கையாடல் செய்தார். இதனால், 6 மாதத்துக்கு முன்பு அவரை வேலையில் இருந்து நீக்கினேன். ஒருமுறை என் வீட்டிற்கு வந்தபோது, என் வீட்டில் இருந்து 5 சவரன், கலெக் ஷன் பணம் மற்றும் செல்போனை திருடிவிட்டு சென்றார். இதுபற்றி கடந்த வருடம் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். நேற்று முன்தினம் கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பாபுஜி சாப்பிட வருவதாக தகவல் கிடைத்தது.

அப்போது நான் என் நண்பர்களுடன் அங்கு காரில் சென்று, அவரை கடத்தி சென்று முகப்பேரில் உள்ள, எனது வீட்டில் அடைத்து வைத்து தாக்கியபோது அவர் இறந்துவிட்டார். இதன்பிறகு பாபுஜியின் உடலை காரில் மாங்காட்டுக்கு கொண்டு சென்று அங்குள்ள ஒரு மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டுட்டோம்’’ என்றார். இந்நிலையில், சரணடைந்த 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக, தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், பாபுஜியை எதற்காக கொலை செய்தார்கள், பெண் விவகாரம் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Athram , 4 people arrested including supporting actor, financier who beat Athram collection employee for mishandling collected money: Torture without giving food, water; The excitement in the film industry
× RELATED பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால்...