×

எஸ்ஐ, ஏட்டுவை கொல்ல முயன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் பார்வதி. அரசு பள்ளி ஆசிரியையான இவர், 15.06.2016 அன்று உத்தனப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தனர். அங்கிருந்து தப்பிய கொள்ளையர்கள், ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் பதுங்கியிருப்பதாக, ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அப்போதைய குற்றப்பிரிவு எஸ்ஐ நாகராஜ், ஏட்டுகள் முனுசாமி, தனபால் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது, கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் முனுசாமி உயிரிழந்தார். நாகராஜ், தனபால் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, கர்நாடக மாநிலம் கே.ஆர்.புரா அருகே ஜி.எம்.பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(20), ஓசூரைச்சேர்ந்த முஜாமில்(22), பெங்களூருவைச் சேர்ந்த விக்னேஷ்(எ) விக்கி(22), அமர்(24) ஆகியோரை கைது செய்தனர்.

இதில், ஏட்டு முனுசாமியை கத்தியால் குத்தி கொலை செய்த கிருஷ்ணமூர்த்தியை, 16.06.2016ம் தேதி போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்த போது, மாரடைப்பால் உயிரிழந்தார். மற்ற 3 பேர் மீதான வழக்கு, ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போதே, விக்கி தற்கொலை செய்து கொண்டார். மற்ற இருவர் மீதும் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ரோஸ்லின் துரை நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, சப்இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக, முஜாமில்லுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அமர் விடுவிக்கப்பட்டார்.

Tags : Attu , Youth who tried to kill SI, Attu gets life sentence
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்