மீஞ்சூர் பஜாரில் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூல்: 5 பேர் கும்பல் அதிரடி கைது

பொன்னேரி: மீஞ்சூர் அருகே அரியன்வாயல் பகுதியில் வசிப்பவர் சித்திக் பாஷா (53). மீஞ்சூர் பஜாரில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை சித்திக் பாஷா, வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது கடைக்குள் நுழைந்த 5 பேர், ‘எங்களுக்கு வாரந்தோறும் ரவுடி மாமூல் தரவேண்டும். இல்லையேல் உங்களது கடையை காலி செய்து, உங்களையும் கொலை செய்து விடுவோம் என சித்திக் பாஷாவை மிரட்டியுள்ளனர். இதேபோல், மீஞ்சூர் பஜார் பகுதியில் கடை நடத்தி வரும் பலரிடம் கடந்த சில நாட்களாக 5 பேர் கும்பல் ரவுடி மாமூல் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் சித்திக் பாஷா புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிரஞ்சவீ தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், ஆவடி காவல் ஆணையரக ஆணையர் உத்தரவின்பேரில், துணை ஆணையர் மணிவண்ணன் மேற்பார்வையில் தனிப்படையினர் மாமூல் கேட்டு மிரட்டிய 5 பேர் கும்பல் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு சித்திக் பாஷா உள்பட பல்வேறு வியாபாரிகளிடம் ரவுடி மாமூல் கேட்டு மிரட்டிய மீஞ்சூரை சேர்ந்த முகேஷ், தீபக், சந்தோஷ், கண்ணன், சரத்ராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான தேவராஜ், மணிவண்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: