×

போரை முடிவுக்கு கொண்டு வர சீன அதிபரை விரைவில் சந்திப்பேன் : உக்ரைன் அதிபர் தகவல்

கீவ்:சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவ படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தப் போரால் இரு தரப்பிலும் இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இருநாடுகளும் அமைதியற்று காணப்படும் இந்தச் சூழலில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும், உக்ரைனும் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு செயல் திட்டத்தையும் சீனா முன்வைத்துள்ளது. அதன்படி, ‘ரஷ்யாவும் உக்ரைனும் விரைவில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரே திசையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர சமாதான பேச்சுவார்த்தை நடத்த சீனா வலியுறுத்தியிருந்த நிலையில், சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘சீன அதிபரை விரைவில் சந்திக்க உள்ளேன். ஆனால் ரஷ்ய அதிபர் புடினுடன் எக்காரணம் கொண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை. மூன்றாம் உலகப் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக ரஷ்யாவிற்கு சீனா ஆயுதப் பொருட்களை வழங்குவதை தடுக்க தன்னால் முடிந்ததைச் செய்வேன்’ என்று கூறியுள்ளார். இருப்பினும் சீன, உக்ரைன் அதிபர்கள் எப்போது இந்த சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.

Tags : உக்ரைன் ,அதிபர்
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...