சிபிஐ கைது செய்த தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கீழாம்பல் தொடக்க பள்ளி ஆசிரியர் ராமசந்திரன் சஸ்பெண்ட்!!

ராமநாதபுரம்: தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கீழாம்பல் தொடக்க பள்ளி ஆசிரியர் ராமசந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செம்பொன்குடியைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் டேக்ஸ் இன்பர்மேஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் மூலம் வருமான வரி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பலருக்கு குறைந்த கணக்கு காண்பித்து பணம் திரும்ப பெற்று கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ரூ.2.84 கோடி திரும்ப பெற்றுக் கொடுத்ததாக வருமான வரித்துறையினர் புகாரின் பேரில் கடந்த 2021ல் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிந்தனர். இதனடிப்படையில், பஞ்சாட்சரத்தை கடந்தாண்டு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதன்பின் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.இந்நிலையில், இவரது தம்பியும், கீழம்பல் தொடக்கப்பள்ளி ஆசிரியரும், கடந்தாண்டில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான ராமச்சந்திரன் வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்தை பஞ்சாட்சரம் அனுப்பினார்.

இருவருக்கும் வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக ராமச்சந்திரனை (38) சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு மதுரை அழைத்து வந்தனர். மதுரை அலுவலகத்தில் வைத்து ராமச்சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், பஞ்சாட்சரம் நிறுவனத்திலிருந்து ராமச்சந்திரன் வங்கி கணக்கிற்கு முறைகேடாக பண பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ராமசந்திரனை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ராமச்சந்திரனை மதுரையிலுள்ள சிஐபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாளில் நீதிமன்ற காவலில் வைக்கவும், மார்ச் 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சிபிஐ நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கீழாம்பல் தொடக்க பள்ளி ஆசிரியர் ராமசந்திரனை பரமக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் ஒன்றிய அரசு வழங்கிய தேசிய விருதை திரும்ப பெற கோரி மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: