பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச எம்எல்ஏ கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கின் முக்கிய சாட்சி ஒருவரும் அவரது பாதுகாப்பு போலீஸ்காரரும் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜூ பால் கடந்த 2005ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான அதிக் அகமது தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால், தூமன்கஞ்ச்சில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், இரண்டு போலீஸ்காரர்கள் 24 மணி நேர பாதுகாப்பில் இருந்தனர். இந்நிலையில், உமேஷ் பாலின் வீட்டிற்கு வெடிபொருட்களுடன் வந்த கும்பல், அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.
தகவலறிந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த உமேஷ் பால், 2 பாதுகாப்பு போலீசார் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரயாக்ராஜ் போலீஸ் கமிஷனர் ரமித் சர்மா கூறுகையில், ‘ராஜூ பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் மர்ம நபர்களால் நாட்டுவெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.
அவரது பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் சந்தீப் நிஷாத்தும் வெடிவிபத்தில் பலியானார். மற்றொரு போலீஸ்காரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களைக் கைது செய்ய எட்டு தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.
