×

கொடைக்கானலில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.   வட்டார கல்வி அலுவலர் பழனிராஜ் தலைமை வகிக்க, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். 6வது வார்டு கவுன்சிலர் கணேசன், வட்டார வள மைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வளமைய சிறப்பு பயிற்றுநர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகாமில் மாற்றுத்திறன் உடையோர், மூளை வளர்ச்சி குன்றியோர், கை கால் பாதிப்படைந்தோர், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எலும்பு முறிவு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.முகாமில் 18 வயதுக்குட்பட்டோர் 65 பேர், 18 வயதுக்கு மேற்பட்டோர் 45 பேர் என மொத்தம் 110 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை, பஸ் பாஸ், ரயில் பாஸ், மருத்துவ காப்பீட்டு அட்டை ஆகியவை வழங்கப்பட்டது. பின்னர் முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு, தேனீர் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் சகாய செல்வி, மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.



Tags : Kodaikanal , Kodaikanal, Handicapped, Special Medical, Camp
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்