×

ஓடுபாதையில் உரசியபடி பறந்த விமானம் அவசர தரையிறக்கம்: 168 பயணிகள் உயிர் தப்பினர்

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் உரசியபடி பறந்ததால், திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 168 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு ஏர் இந்தியா விமானம் 168 பயணிகளுடன் நேற்று காலை 9.45 மணிக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து மேலே பறக்கத் தொடங்கிய போது, விமானத்தின் பின்பகுதி தரையில் உரசியதாகவும், சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், விமானத்தை திருவனந்தபுரத்திற்கு திருப்பி அவசரமாக அங்கு தரையிறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடனடியாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவினர் தயார்நிலையில் நிறுத்தப்பட்டனர்.

விமானத்தில் அதிகப்படியான எரிபொருள் இருந்ததால், அதை தீர்ப்பதற்காக வானில் சுமார் இரண்டரை மணி நேரம் விமானம் வட்டமிட்டபடி பறந்தது. பின்னர் பிற்பகல் 12.15 மணி அளவில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு, ஓடுபாதையில் இருந்து விமானம் வெளியேற்றப்பட்டது. இதன் பின்னர் அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. பயணிகள் அனைவரும் மாலையில், மாற்று விமானம் மூலம் தமாம் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விமானபோக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.



Tags : Plane skids off runway, makes emergency landing: 168 passengers survive
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...