விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கு பெங்களூரு ஆசிரமத்தில் சிபிசிஐடி சோதனை: காணாமல் போனவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு தேடும் பணி தீவிரம்

விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜூபன்பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். பலர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10ம் தேதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் மீது கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததை உறுதி செய்தனர். நேற்று முன்தினம் இரவு 8 பேரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனு இன்று  விசாரணைக்கு  வரவுள்ளது. இதுவரை 6 பேர் காணாமல் போனதாக கெடார் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருந்தன. அதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபாருல்லா(70). தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் பகுதியைச் சேர்ந்த லட்சுமிஅம்மாள்(85), அவரது மகன் முத்து விநாயகம்(48). ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டு தேடி வருகின்றனர். விழுப்புரம் மட்டுமின்றி சேலம், கள்ளக்குறிச்சி உள்பட மாவட்டங்களிலும் இவர்களின் புகைப்படங்களை பொதுமக்கள் பார்வையில் ஒட்டப்பட்டு தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் நிர்வாகி ஜூபன்பேபி, பெங்களூருவில் தனது நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் ஆசிரமத்திற்கு ஜாபருல்லா உள்ளிட்ட 53 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதில் ஜாபருல்லா உள்ளிட்ட 11 பேர் மட்டும் மாயகமாகி போனது தெரியவந்தது. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று விழுப்புரத்தில் இருந்து பெங்களூருவுக்கு விரைந்தனர். அவர்கள் பெங்களூரு தொட்டக்குப்பி ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான ஆசிரமத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 11 பேர் மாயமானவர்கள் குறித்து உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு சில சட்டப்பூர்வமான ஆவணங்களை கைப்பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

*காங்கிரஸ் பிரமுகரின் சகோதரரும் மாயம் கடலூர் முதுநகர் அருகே உள்ள சங்கொலிகுப்பத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(60). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த வருடம் ஜெயக்குமாரை குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஆசிரமத்தில் சேர்த்து உள்ளனர். அவர் தற்போது மாயமாகி உள்ளார். ஆசிரம நிர்வாகத்திடம் கேட்டபோது ஜெயக்குமாரை, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சரணாலயம் அறக்கட்டளை நடத்தும் கருணை இல்லத்துக்கு மாற்றிவிட்டதாக தகவல் தெரிவித்தனர். அங்கு அவர் கடந்த வருடம் டிசம்பர் 17ம் தேதி, இறந்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகியும் ஜெயக்குமாரின் தம்பியுமான கிருஷ்ணமூர்த்தி கடலூர் ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார்  அளித்துள்ளார்.

Related Stories: