ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 75 கிலோ கேக் வெட்டி எடப்பாடி கொண்டாட்டம்: ஓ.பன்னீர்செல்வம் தனியாக மாலை அணிவித்து மரியாதை

சென்னை: ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் 75 கிலோ கேக் வெட்டி எடப்பாடி பழனிசாமி கொண்டாடினார். ஓ.பன்னீர்செல்வம் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு நேற்று 75வது பிறந்த நாளாகும். இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும், எம்.ஜி.ஆர். சிலைக்கும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அதிமுக முன்னணி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மலரையும் எடப்பாடி வெளியிட்டார். அதன் முதல் பிரதியை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பெற்றுக்கொண்டார். பின்னர், கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அதிமுக கொடியை ஏற்றி வைத்து, அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எடப்பாடி இனிப்பு வழங்கினார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, கொண்டாடப்படும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை எடப்பாடி அணியினர் தமிழகம் முழுவதும் நேற்று விமரிசையாக கொண்டாடினர். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்பாட்டின் பேரில் 75 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி அனைத்து தலைமை கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கேக் வழங்கினார். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திராவுக்கும் கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமையும் எடப்பாடி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அதேபோன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி, நேற்று காலை 10 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர். முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Related Stories: