×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தகோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சுயேச்சை வேட்பாளர் கண்ணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார். இதேபோல பிரச்சாரத்தின்போது பாதுகாப்பு வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் சட்டத்துறை செயலாளர் சேவியர் பெலிக்ஸ் வழக்குத் தொடர்ந்திருந்தார்.  மற்றொரு சுயேச்சை வேட்பாளரான ரவி, தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுபானம் வினியோகம் செய்வதற்காக சட்டவிரோதமாக அமைத்துள்ள கொட்டகைகளை அகற்றுமாறு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, பண பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு குழுக்களும், பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரித்து, முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமீறல் தொடர்பாக 19 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றார்.

நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில், தமிழக காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றுவிட்டு வழித்தடத்தை மீறி பேரணி சென்றனர். பிளாஸ்டிக் பைப்புகளில் இரும்பு பைப்புகள் பொருத்தி வன்முறையில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக இடையேயான மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணப்பட்டுவாடா புகாரை பொறுத்தவரை, எந்த தேதியில், யார் பணம் கொடுத்தார்கள், பெற்றார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இல்லை. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மற்றும் ரவி தொடர்ந்த வழக்குகளில், அதிமுக தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மனுதாரர்களின் புகார்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தனர்.




Tags : Erode East ,Chennai High Court , Case filed to stop Erode East constituency by-election dismissed: Chennai High Court order
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்